வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிய, 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்ட மசோதா, இன்று (மார்ச் 23) சட்டசபையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்கு பின் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, அவசர சட்டம் இயற்ற, தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப்., 26ல் ஒப்புதல் அளித்தது. அக்., 1ல், அவசர சட்டத்துக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்தார். தமிழக சட்டசபையில், அக்., 19ல், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
கவர்னர் ஒப்புதலுக்காக, அக்., 28ல் அனுப்பப்பட்டது; கவர்னர் ஒப்புதல் தரவில்லை. தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, சட்ட மசோதாவை அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை, மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்ப, தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி, சட்டசபையில் இன்று 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்ட மசோதா,வை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் பேசியதாவது:
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து, 41 பேர் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். கனத்த இதயத்துடன் சட்டசபையில் நிற்கிறேன். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என மின்னஞ்சலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கை விடுத்தனர். ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக 25 பேர் மட்டுமே கருத்து கூறியுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னரே தடை மசோதா கொண்டு வரப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது குறித்து ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தோம். ஆன்லைன் தடை மசோதாவை 131 நாட்களுக்குப் பின் கவர்னர் திருப்பி அனுப்பினார். தடை மசோதா குறித்து கவர்னர் ரவி கேட்ட விளக்கம், 24 மணி நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆன்லைன் ரம்மி தொடர்பாக 2.4 லட்சம் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மாணவர்களின் படைப்பாற்றல் பாதிப்பதாக 74% ஆசிரியர்கள் கருத்து கூறியிருந்தனர். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு சட்டசபையில் அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவளிக்க வேண்டும். மக்களை காப்பதே சட்டத்தின் கடமை. மனசாட்சியை உறங்கச் செய்துவிட்டு, எங்களால் ஆட்சியை நடத்த முடியாது.
ஆன்லைன் ரம்மி தடை மசோதவை ஒருமனதாக நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மனசாட்சியை உறங்கச் செய்து விட்டு, எங்களால் ஆட்சியை நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தை இனி ஒரு உயிரும் பறிக்கப்படாமல், ஒரு குடும்பமும் நடுத்தெருவில் நிற்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
மசோதா மீது பாமக.,வின் ஜிகே மணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், பா.ஜ.,வின் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதனை தொடர்ந்து மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அப்போது பழனிசாமி பேசுகையில், கட்சியில் ஒருவருக்கு என சொல்லிவிட்டு, வேறொருவரை ஏன் பேச அனுமதித்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.
சபாநாயகர் அப்பாவு கூறுகையில், முக்கியமான மசோதா என்பதால் முன்னாள் முதல்வர் என்ற முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. வேறு நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்றார்.