சூரத்: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 'நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என, திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் இருக்கிறது' எனப் பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ., - எம்.எல்.ஏ., புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, '' பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் குற்றவாளி. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது '' என தீர்ப்பு வழங்கினார். மேலும், 10 ஆயிரம் பிணையில் அவருக்கு ஜாமின் வழங்கியதுடன், இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டு உள்ளது.