சென்னை: ''கூட்டணி கட்சியினரின் விமர்சனத்தை நல்லதாகவே பார்க்கிறேன்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
டில்லி செல்லும் முன்னர் அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது வடிவேல் நடித்த 23ம் புலிகேசி படம் போல் உள்ளது. டிஜிபி மற்றும் உளவுத்துறை அதிகாரியிடம் தினமும் முதல்வர், முதலில் கேட்கும் கேள்வி: நம்மை பற்றி தவறாக யார் சமூக வலைதளத்தில் பேசுகிறார்கள் என்று.
அவர்களை, காலை 3 மணி, 4 மணி, 5 மணிக்கு வீட்டிற்கு சென்று கைது செய்து ரிமாண்ட் செய்வதில் காவல்துறை முனைப்பு காட்டுகிறார்களே தவிர, பெண்களின் மீதும், குழந்தைகள் மீதும் வன்மத்தை கக்குகிறவர்கள் மீது கவனம் செலுத்துவதில்லை.
தினமும் தமிழகத்தில் சமூக வலைதளத்தில் கருத்து, மீம்ஸ், கார்ட்டூன் போட்டவர்களை கைது செய்ய புலி மாதிரி காவல்துறை இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது 23ம் புலிகேசி படத்தில் பார்த்தது தான். எந்த ஒரு மன்னன், எந்த ஒரு அரசன் ஆட்சியாளன் 'இன்செக்யூர்' ஆக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சமூக வலைதளத்தில் போடும் கருத்துகள் முள் குத்துவது போன்று இருக்கும் என சொல்வார்கள். நமது முதல்வருக்கு, சமூக வலைதளத்தில் வரும் கருத்துகள் முள் போன்று குத்துவது போன்று தெரிகிறது.
18, 19 வயதுடையவர்களை கைது செய்து சிறையில் போடுவது அது எந்தளவுக்கு முதல்வரின் பெருந்தன்மையை காட்டுகிறது.தமிழக காவல்துறை எதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை விட்டு விடுகிறது. குற்றச்செயல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சமூக வலைதளத்தில் மீது மட்டும் காவல்துறை கண்ணாக இருப்பது எந்த விதமான சட்டம் ஒழுங்கு பராமரிப்பை காட்டுகிறது.

அரவக்குறிச்சியில் 30 கோடி செலவு செய்துள்ளதாக செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு குறித்து அண்ணாமலை கூறியதாவது: ஆட்சி இருக்கும்போது நீங்களே கண்டுபிடியுங்கள். தமிழகத்தில் இருக்கும் முழு அரசு துறையையும் அண்ணாமலை மீது ஏவிவிடட்டும். கர்நாடகாவில் 9.5 ஆண்டுகள் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த போது ஒரு காசு லஞ்சம் வாங்கியிருந்தால் கர்நாடகாவில் சல்லடை போட்டு தேடிப் பிடித்து ஒருவரை பிடித்து வந்து நிறுத்தினால், பதில் கூறுகிறேன்.
எனது போனை ஒட்டுக்கேட்கிறீர்கள். அனைத்தும் உங்களிடம் உள்ளது. அதை கொண்டு அமைச்சர் பேச வேண்டும். ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது, உங்கள் பக்கம் அரசு இருப்பதை மறந்துவிட வேண்டாம். அரசும், அதிகாரமும் உங்கள் பக்கம் இருக்கும் போது என் மேல் குற்றஞ்சாட்டி அதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். ஆதாரத்தை கொண்டு வந்தால், பதில் கூறுகிறேன்.
கூட்டணி கட்சி தலைவர்களின் விமர்சனம் நல்லது தான். பா.ஜ.,வின் வளர்ச்சியை அவர்கள் ரசிக்கவில்லை என்று பார்க்கிறேன். யாராக இருந்தாலும், அவர்களுடைய கட்சி வளர வேண்டும் என நினைப்பார்கள். கூட்டணி கட்சியாக இருந்தாலும், பா.ஜ.,வை வளர்க்க வேண்டும் என நினைத்தால் முட்டாள்கள். யாரும் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெரும் தலைவர்கள்.
நான் இங்கிருந்து கொண்டு, வேறு கட்சியை வளர்க்க நினைத்தால், நான் முட்டாள். அரசியலை பொறுத்தவரை யாரும் நண்பர்கள் இல்லை. இதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அன்று பா.ஜ., வளர்ச்சி பெறும். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.