சென்னை: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதற்கு சூரத் கோர்ட் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழக சட்டசபை வளாகத்தில் காங்., எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

கும்பகோணத்தில் காங்., தலைவர் அழகிரி தலைமையில் சிலர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
நீதியின் பெயரால் இந்த தண்டனையா ?
போராட்டத்தின் போது அழகிரி கூறியதாவது: இந்திய ஜனநாயகத்தில் குற்றம் செய்தவர்கள் மோடி என்று பெயரோடு முடிவதாக சொல்லியிருப்பதில் எவ்வித தவறும் இல்லை. பா.ஜ., வின் சார்பில் ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது.
நீதியின் பெயரால் இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காதீர்கள் என எங்கள் தரப்பில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். சட்ட வழியில் போராடி வெற்றி பெறுவோம் என்றார்.

தலைமை செயலகம் அருகே காங்., எம்எல்ஏ செல்வப்பெருந்தகை மற்றும் பலர் கறுப்பு ரிப்பன் அணிந்து கோஷங்கள் எழுப்பினர்.
இது போல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்., தலைமை அலுவலகம் முன்பு கூடிய காங்., தொண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.