வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆயுதங்களை விட வார்த்தைகள் ஆபத்தானவை என்ற பாடத்தை நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ராகுல் கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறியதாவது: ஆயுதங்களால் ஏற்படும் காயத்தை விட, வார்த்தைகளால் ஏற்படும் காயம் ஆழமாக இருக்கும் என்பதை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும். தீர்ப்பின் மூலம் அனைவரும் பாடம் படித்து கொள்வதுடன், பொது வெளியில் பேசும் போது எல்லை தாண்டக்கூடாது எனக்கூறியுள்ளார்.
ராகுல் வழக்கில் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த காங்., தலைவர் மல்லிகார்ஜூ கார்கே, நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்பட்டனர் எனக்கூறியிருந்தார்.

தீர்ப்பு குறித்தும், கார்கே கருத்து குறித்தும் முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கார்கேயின் கருத்து, நீதித்துறை மீது அவருக்கு நம்பிக்கையில்லாததை காட்டுகிறது. நீதித்துறையை தனது பாக்கெட்டில் வைத்து கொள்ள காங்கிரஸ் விரும்புகிறதா?
ராகுல் தகுதி நீக்கம் செய்யப்படுவது குறித்து சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஜாதியை குறிப்பிட்டு மக்களை ராகுல் அவமானப்படுத்தி உள்ளார். அவரின் கருத்துகள் அதிகபட்ச அவதூறு என்றார்.
தீர்ப்பு தொடர்பாக ராகுலின் கருத்து குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மக்களை விமர்சிக்க ராகுலுக்கு சுதந்திரம் வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறதா? நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவின் சட்டப்படி, தனிநபர், அமைப்புகள் என யாரேனும் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அதில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சேபனை உள்ளது. விமர்சனங்களை வீச ராகுலுக்கு முற்றிலும் சுதந்திரம் வேண்டும் என அக்கட்சி எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.