வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்வதற்கான மசோதா ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், கவர்னர் ரவி டில்லி சென்றார். அவருடன் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு அவர் மத்திய அமைச்சர்களை சந்திப்பார் எனக்கூறப்பட்டது. தேவைப்பட்டால், பிரதமர் மோடியையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கவர்னர் ரவி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமான வகையில் இருந்ததாக கவர்னர் மாளிகை கூறியுள்ளது.
இதேபோல், அவசர பயணமாக, டில்லி சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அப்போது, கூட்டணி குறித்து, தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாகவும், அ.தி.மு.க., வுடன் கூட்டணி தொடர்ந்தால், தமிழகத்தில் பா.ஜ., வளர முடியாது எனவும், அவர் எடுத்துரைத்தாக கூறப்படுகிறது.