திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் அடுத்து உள்ளது பொன்னாங்குளம் கிராமம். இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி வாசிகளின் குடிநீர் பயன்பாட்டிற்காக மணவூர் சாலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி 3 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதன் துாண்கள் விரிசல் அடைந்தும், குடிநீர் தொட்டியின் மேற்புறம் சிமென்ட் பூச்சிகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை துாய்மைப்படுத்த முடியாமல் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால் துாய்மையான நீர் வினியோகிக்க முடியாததால், கிராமத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், சேதமடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.