மார்ச் 24, 1775
திருவாரூரில், ராமஸ்வாமி தீட்சிதர் - சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1775ல், இதே நாளில் பிறந்தவர் முத்துஸ்வாமி தீட்சிதர்.
தன், 16 வயதுக்குள், கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டு, வீணையுடன், ஹிந்துஸ்தானி இசையையும் கற்றதுடன், வேதம், சாஸ்திரம், தர்க்கம், வியாகரணங்களையும் கற்றார். காசியில், சிதம்பர யோகியிடம் தத்துவம் பயின்றார்.
கங்கையில் மூழ்கி எழுந்த போது, புனிதமான வீணை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. முருகனை குருவாக ஏற்று, 'குருகுஹ' என்ற வார்த்தை வரும்படி பல பாடல்களை இயற்றினார். பஞ்சபூதங்கள், தெய்வங்கள், நவக்கிரஹங்கள், புண்ணிய நதிகள், மொழிகள் உள்ளிட்டவற்றை பற்றி, கிருதிகள், வர்ணம், 72 மேளகர்த்தா ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றி பாடியுள்ளார்.
இப்போதும், சங்கீதம் கற்போருக்கும், தேர்ந்த இசைக் கலைஞர்களுக்கும், மேடைக்கு விருந்தாக இவரின் பாடல்களே உள்ளன. பாடி மழையை வரவழைத்ததால், 'அமிர்தவர்ஷினி ராகத்தின் பிதாமகர்' என்று அழைக்கப்பட்ட இவர், 1835 அக்டோபர் 21ல், தன், 60வது வயதில் காலமானார்.
கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் பிறந்த தினம் இன்று!