வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'லோக்பால் அமைப்பின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதுவரை ஒருவர் கூட, இந்த சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படவில்லை' என, பார்லிமென்ட் நிலைக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர் நலன், பொது குறைதீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, லோக்பால் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தன் அறிக்கையை பார்லிமென்டில் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதில் கூறப்பட்டு உள்ளதாவது: நடப்பு 2022 - 2023ம் ஆண்டில், லோக்பால் அமைப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகார்களில், 2,518 புகார்கள், உரிய நடைமுறையைப் பயன்படுத்தி தாக்கல் செய்யப்படவில்லை என நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், உரிய முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 242 புகார்களில், 191 மீதான விசாரணை முடிந்துள்ளது.
உரிய முறையில் தாக்கல் செய்யப்படவில்லை என, அதிகளவில் புகார்கள் தள்ளுபடி செய்யப்படுவதை, லோக்பால் அமைப்பு தவிர்க்க வேண்டும். பொது சேவையில் ஈடுபட்டு உள்ளோர் மீதான ஊழல், லஞ்சப் புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவே இந்த அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அமைப்பின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. புகார்கள் கொடுக்கப்படுவதை தடுப்பதாக இல்லாமல், அதை ஊக்குவிக்கும் வகையில் லோக்பால் செயல்பட வேண்டும்.
லோக்பால் அமைப்பின் தலைவர் பதவி, கடந்தாண்டு மே மாதத்தில் இருந்து காலியாக உள்ளது; பொறுப்பு தலைவரே உள்ளார். அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லோக்பால் அமைப்பு விசாரணை நடத்தி, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.