வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...
என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
![]()
|
'திராவிட மாடல்' அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில், வரும் நிதியாண்டில், தமிழக அரசின் மொத்தக் கடன், 7.26 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் உள்ள, 2.23 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் அடிப்படையில் கணக்கிட்டால், 2024 மார்ச், 31ல், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும், 3.25 லட்சம் ரூபாய் கடன் சுமை இருக்கும்.
இந்த அளவுக்கு, மக்களின் தலையில் கடனை ஏற்றி வைத்து, இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப் போவதாக, தம்பட்டம் அடித்துள்ளனர், கழக ஆட்சியாளர்கள்.
பஸ்சில் இலவச பயணம் செய்ய, மகளிருக்கு எந்தத் தகுதியும் நிர்ணயம் செய்யாத திராவிடச் செம்மல்கள், மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் விஷயத்தில் மட்டும், 'பெண்களின் தகுதி, தராதரம் பார்த்து வழங்குவோம்' என்கின்றனர்.
ஆனால், தேர்தல் நேரத்தில், 'தமிழக இல்லத்தரசிகள் அனைவருக்கும், மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும்...' என, வாக்குறுதி அளித்தனர்; தற்போது, அதற்கு மாறாக பேசுகின்றனர்.
'நகைக்கடன் வாங்கிய அனைவருக்கும், அவர்களது கடனை ஒரே உத்தரவில் ரத்து செய்வோம்' என்று, தேர்தல் வாக்குறுதி அளித்தவர்கள், 'ஐந்து சவரன் நகைக்கடனை மட்டுமே ரத்து செய்வோம்; அதுவும் தகுதியானவர்களுக்கே ரத்து செய்வோம்' என, சூப்பராக, 'அந்தர்பல்டி' அடித்தனர். இப்போது, மகளிருக்கு 1,000 ரூபாய் தரும் விஷயத்திலும், 'தகுதியான இல்லத்தரசிகளுக்கு மட்டுமே தருவோம்' என்று, மீண்டும், 'பல்டி' அடித்திருக்கின்றனர்.
'ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம்' என்று சொல்லி, ஆட்சிக்கு வந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ரூபாய்க்கு ஒரு படி அரிசி கூட தராமல், மக்களுக்கு பட்டை நாமம் சாத்திய கதை, இன்றும் நம் நினைவில் இருக்கிறது.
![]()
|
வாயால் வடை சுடுவதில் வல்லவர்களான திராவிடச் செம்மல்கள், மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்குவதையும், தொடர்ந்து வழங்குவரா என்பதும் சந்தேகமே. 'ஒன்றிய அரசு எங்களுக்கு தர வேண்டிய மானியத் தொகையை தராமல் இழுத்தடிக்கிறது; அதனால் தான், மகளிருக்குத் தொடர்ந்து தர முடியவில்லை' என்று, அடுத்த சில மாதங்களில், 'ஜகா' வாங்கினாலும், ஆச்சரியமில்லை.
'சொன்னதை செய்வோம்; செய்வதையே சொல்வோம்' என்று, தம்பட்டம் அடிக்கும் திராவிடச் செம்மல்கள், 'சொல்லாததையும் செய்வோம்' என்று சொல்லி, மக்களின் காதுகளில் அவ்வப்போது மலர் சூடுகின்றனர். இந்த லட்சணத்தில், வரும் லோக்சபா தேர்தலில், 'நாற்பதும் நமதே; நாடும் நமதே' என்று வாய்ப்பந்தல் வேறு போடுகின்றனர்.
இளிச்சவாயர்களாக இருக்கும் தமிழர்களுக்கு, இன்னும் எத்தனை பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களுக்கு பட்டை நாமம் போடுவரோ... யாமறியோம் பராபரமே!