லண்டன்: லண்டனில் உள்ள இந்திய துாதரகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி உறுதி அளித்தார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள இந்திய துாதரகத்துக்குள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இங்கிருந்த நம் தேசியக் கொடியை அகற்றினர். இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் சார்பில் நேற்று முன்தினம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய துாதரகத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்; சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இருந்தும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவுக்கு எதிராகவும், சீக்கியர்களுக்கு தனி நாடு கேட்டும் அவர்கள் கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் துாதரகத்தில் பல இடங்களில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டன. சுவர்கள், ஜன்னல்களிலும், மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டன.

இது குறித்து, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி கூறியுள்ளதாவது: இந்தியா - பிரிட்டன் இடையே சிறப்பான உறவு உள்ளது. அதை மதிக்கும் வகையில், இந்தியத் துாதரகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவோர் அமைதியான முறையில் செயல்பட வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
துாதரகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக, பிரிட்டனுக்கான இந்திய துாதர் விக்ரம் துரைசாமி, இந்திய வெளியுறவுத் துறை உயரதிகாரிகளுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.