புதுடில்லி: பீஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் பா.ஜ., தலைவர்களை, அக்கட்சியின் மேலிடம் அதிரடியாக மாற்றி, புதியவர்களை நியமித்துள்ளது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதற்கு பா.ஜ., மேலிடம் தயாராகி வருகிறது. இந்நிலையில், பீஹார், ராஜஸ்தான், புதுடில்லி, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமித்து, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா நேற்று உத்தரவிட்டார்.![]()
|
நடவடிக்கை
இதன்படி,
டில்லி மாநில பா.ஜ., தலைவராக வீரேந்திர சச்தேவா
நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இம்மாநில பா.ஜ., தலைவராக இருந்த
அசுதேஷ் குப்தா, கடந்த டிசம்பரில் அந்த பதவியிலிருந்து
நீக்கப்பட்ட பின், வீரேந்திர சச்தேவா செயல் தலைவராக பதவி வகித்து
வந்தார்.
தற்போது தலைவராக அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு
உள்ளது. ஆளுங் கட்சியான ஆம் ஆத்மிக்கு எதிராக கடும் விமர்சனங்களை
வைத்து வருவதால், அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளதாக
கூறப்படுகிறது.
விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள
ராஜஸ்தான் மாநில பா.ஜ., தலைவராக, லோக்சபா எம்.பி., - ஜி.பி.ஜோஷி
நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே தலைவராக இந்த சதீஷ் பூனியா,
முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியாவுடன் மோதல் போக்கை
பின்பற்றியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிகிறது.
நியமனம்
பீஹார்
மாநில பா.ஜ., தலைவராக, அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்
சம்ராத் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு
பதிலாக, இவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதர
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே செல்வாக்கு உள்ள தலைவர்
என்பதால், சவுத்ரிக்கு இந்த பதவி கிடைத்துள்ளதாக பா.ஜ.,
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநில பா.ஜ., தலைவராக இருந்த சமீர் மொஹந்திக்கு பதிலாக, மன்மோகன் சாமல் நியமிக்கப்பட்டுள்ளார்.