சென்னை:'மாநில ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும் நெறிப்படுத்தவும் காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு. மக்கள் நலன் காப்பது ஒன்றே சட்டத்தின் கடமை'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்ட முன்வடிவு - 2022ஐ மறு ஆய்வு செய்யக் கோரி முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட்டு அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்டுஉள்ளனர்.
இதைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் சட்டத்தை கையில் வைத்திருக்கக் கூடிய அரசுக்கு இருக்கிறது.
அதை உணர்ந்து தான் 'ஆன்லைன்' சூதாட்டத்தைத் தடுக்க ஒரு வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு 2022 செப். 26ல் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவசர சட்டம் 2022 கவர்னரால் அக். 1ல் பிரகடனப்படுத்தப்பட்டது; அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதன்பின் அவசர சட்டத்துக்கு பதிலாக ஒரு சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டது.
அந்த சட்ட முன்வடிவு அக். 19ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் நவ. 23ம் தேதி கவர்னர் சில விளக்கங்களை கேட்டார்.
அடுத்த 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட அமைச்சரும் டிச. 1ல் கவர்னரை சந்தித்து விளக்கம் அளித்தார்.
ஆனால் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து சில குறிப்புகளுடன் மார்ச் 6ம் தேதி சபாநாயகருக்கு கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார்.
அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் அதற்கான பதில்களும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணைய வழி விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்ட முன்வடிவு சபையில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.
மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் 'பந்தயம் மற்றும் சூதாட்டமானது சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலின் 34வது பிரிவில் இடம்பெற்றுள்ளதால் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது' என மிகத் தெளிவாக பார்லிமென்டில் அறிவித்துள்ளார்.
எந்த சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும்தான். மக்களை காப்பது ஒன்றே சட்டத்தின் கடமை.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிறைவேற்றம்
அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த 'தமிழ்நாடு இணைய வழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுக்கான ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்ட முன்வடிவு 2022' சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.