திருச்சி:அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், திடீர் திருப்பமாக, அ.தி.மு.க., முன்னாள் பெண் எம்.எல்.ஏ., சகோதரரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி உள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், 51 வயதில், 2012ம் ஆண்டு, கொலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கை, திருச்சி மாநகர போலீசார், சி.பி.சி.ஐ.டி., போலீசார், பின், சி.பி.ஐ.,யும் விசாரித்தது; எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க, 20 மாதங்களுக்கு முன், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், திருச்சியில் முகாமிட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை 500க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். ஒரு மாதத்துக்கு முன், 12 ரவுடிகளிடம், உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.
எனினும், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பரமேஸ்வரியின் தம்பி 'புல்லட்' ராஜா, 41, அவரது மனைவி கிருஷ்ணவேணி, 36, மற்றும் சிலரிடம், மூன்று வாரங்களுக்கு முன், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன் பின்னணி குறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கூறியதாவது: ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அதே பாணியில், புல்லட் ராஜா என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து, இரு கொலைகளை செய்துள்ளார்.
மூன்றாண்டுகளுக்கு முன், குடிபோதையில் பணம் கேட்டு, தாயிடம் தகராறு செய்த சதீஷ் என்பவரை, புல்லட் ராஜா கொலை செய்தார். இதற்காக, 15 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
தன் மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறி, ஆட்டோ டிரைவர் சின்ராஜ், 33, என்பவரை, கடந்த ஆண்டு சமயபுரம் கோவில் அருகே கொலை செய்தார்.
இந்த இரண்டு கொலைகளிலும், கொலையானவர்களின் கைகள் கம்பியால் கட்டப்பட்டிருந்தன.
இது, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பாணியில் இருந்ததால், புல்லட் ராஜாவையும், அவரது மனைவி மற்றும் சிலரை அழைத்து விசாரித்தோம்.
இந்த கொலைகள் புல்லட் ராஜாவால் செய்யப்பட்டதா அல்லது கூலிப்படை வைத்து செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரித்துள்ளோம். அதே சமயம், ராஜாவின் சகோதரி பரமேஸ்வரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் என்பதால், அரசியல் ரீதியாக பிரச்னை இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை செய்துள்ளோம்.
2013ல், தன் மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த ஜெயபால் என்பவரையும், புல்லட் ராஜா கொலை செய்ததாக தெரிகிறது. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மார்ச் 29ம் தேதியுடன், ராமஜெயம் கொலை செய்யப்பட்டு, 11 ஆண்டுகளாகிறது.