சென்னை,: ''சென்னையில் இன்று துவங்கும், 'ஜி - 20' கூட்டமைப்பின், இரண்டாவது நிதி கட்டமைப்பு பணிக் குழு கூட்டத்தில், பொருளாதார வளர்ச்சிக்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடக்கும்,'' என, தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
'ஜி- - 20' நாடுகள் கூட்டமைப்புக்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதியில், 'ஜி - -20' உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கிறது.
ஜி - 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக் குழு கூட்டம், முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 31 முதல் மூன்று நாட்
களுக்கு, சென்னையில் கல்வி பணிக்குழு கூட்டம் நடந்தது.
![]()
|
பாதிக்கப்படும்
அதன் தொடர்ச்சியாக நிதி கட்டமைப்பு பணிக் குழுவின் இரண்டாவது கூட்டம், இன்று துவங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்திற்கு, இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன், பிரிட்டன் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி
ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.இது தொடர்பாக, அனந்த நாகேஸ்வரன் நேற்று அளித்த பேட்டி:நிதி கட்டமைப்பு பணிக் குழு கூட்டத்தில், 20 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
ஒட்டுமொத்த பொருளாதார பிரச்னைகளுக்கு, இந்த கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும். உணவு, எரிசக்தி, காலநிலை மாற்றம், நிதி பரிமாற்றத்திற்கான வழிகள் ஆகியவை குறித்து, பிரதிநிதிகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து
கொள்வர்.
பொருளாதார மாற்றம், அமெரிக்க, ஐரோப்பாவில் வங்கிகள் மூடல், உணவு பொருட்கள், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுற்றுச்சூழல் குறித்து, குழு விவாதங்கள் நடக்கும்.காலநிலை மாற்றம் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஒரேயடியாக சூரியசக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறி விட முடியாது.பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, மின்சார வாகனங்களுக்கு மாற, தேவையான மூலப்பொருட்கள் கிடைக்குமா என்பது போன்ற
பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரியை பயன்படுத்தி, 200 ஆண்டுகளாக பல நாடுகள் வளர்ந்துள்ளன. திடீரென மாற்றினால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.
எனவே, பொருளாதார வளர்ச்சிக்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.பிரதிநிதிகள் தங்களது கொள்கை முடிவு சார்ந்த அனுபவங்களை தெரிவிப்பர். இறுதியில் நிதி கட்டமைப்பு பணிக் குழு தன் பரிந்துரைகளை இறுதி செய்யும்.
முக்கிய முடிவுகள்
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள், பரிந்துரைகள், வரும் ஏப்ரல் 12, 13 தேதிகளில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடக்கும் 'ஜி - -20' நிதியமைச்சர்கள், ரிசர்வ் வங்கி கவர்னர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலகலப்பாக்க கலைஞர்கள் தயார்
சென்னையில் இன்றும், நாளையும் நடக்கும் 'ஜி - 20' நிதி கட்டமைப்பு பணிக் குழு கூட்டத்தை முன்னிட்டு, கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு, தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளை பற்றிய புரிதல் ஏற்படுத்தவும், மாநாட்டில் உற்சாகத்துடன் பங்கேற்கவும், தமிழக கலை பண்பாட்டுத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதில், வெளியூர்களைச் சேர்ந்த, 10 துடும்பாட்டக் கலைஞர்களும், சென்னை கலாேக்ஷத்ராவைச் சேர்ந்த பாரம்பரிய கலைஞர்களும் இணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.