வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்-மத தீவிரவாத போதகரும், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங், போதை பழக்கத்துக்கு அடிமையான இளைஞர்களை, தற்கொலை படையினராக உருவாக்கி வருவதும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி, ராணுவத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் வீரர்கள் வாயிலாக அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
![]()
|
பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். மத தீவிரவாத போதகராக உள்ள இவர், பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராகவும் உள்ளார்.
சமீபத்தில் இவரது ஆதரவாளர் ஒருவர், அஜ்னலா போலீஸ் ஸ்டேஷனில் காவலில் வைக்கப்பட்டார்.
அவரை விடுவிக்கும் நோக்கத்தில், அம்ரித் பாலின் ஆதரவாளர்கள் போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தி, அவரை விடுவிக்க வைத்தனர். இந்த விவகாரத்தில், அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் பலரை போலீசார் கைது செய்தனர்.
தீவிர விசாரணை
இதை கண்டித்து, பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டம், ஷாகோட் பகுதியில் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்ற அம்ரித்பால் சிங்கை, போலீசார் கைது செய்ய முயன்றனர்.
ஆனால், அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினார். போலீசார் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 78 பேரை கைது செய்த போலீசார், அம்ரித்பால் சிங்கை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் வாயிலாக, பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மீண்டும் தலைதுாக்குமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அம்ரித் பால் சிங்கின் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் சதித் திட்டங்களுக்கு, அம்ரித்பால் சிங் செயல் வடிவம் கொடுப்பது தெரிய வந்துள்ளது.
இது போக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:
'வாரிஸ் பஞ்சாப் தே' அமைப்பின் தலைவரும், நடிகருமான தீப் சித்து கடந்த ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து அம்ரித்பால் சிங் பஞ்சாப் திரும்பினார்.
அப்போது, அவர் எங்கு சென்றாலும் இரண்டு மெய்காப்பாளர்கள் பாதுகாப்புக்காக உடன் வருவர்.
அவர் முதலில் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த கிராமமான ஜல்லுபூர் கேராவில் போதை மறுவாழ்வு மையம் துவங்கினார். ஒரு சில மாதங்களிலேயே, அவரது மெய்காப்பாளர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
மூளைச்சலவை
இதில் ஏழு பேர், அவரது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற இளைஞர்கள் என்பது பின்னாட்களில் தெரியவந்தது. சிகிச்சையின் போதே, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு குறித்து அவர்களுக்கு போதிக்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் ராணுவத்தில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி, பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களையும் தன்னுடைய அமைப்பில் அம்ரித்பால் சிங் சேர்த்துக் கொள்ள துவங்கினார்.
இவர்கள் வாயிலாக, போதை மறுவாழ்வு மைய இளைஞர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை கையாள்வது குறித்து பயிற்சியும் அளித்துள்ளார்.
இவ்வாறு பயிற்சி அளித்து வந்த வரிந்தர் சிங், தல்விந்தர் சிங் என்ற இரு முன்னாள் ராணுவ வீரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதில், வரிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். தல்விந்தர் சிங் தலைமறைவாகி விட்டார்; அவரை தேடி வருகிறோம்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கை படுகொலை செய்த தற்கொலைப் படை தீவிரவாதி திலாவர் சிங்கை போல் தியாக உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என, இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தற்கொலை படையாக மாற்றி வருகிறார்.
![]()
|
இவரது போதை மறுவாழ்வு மையம் மற்றும் குருத்வாராக்களை, ஆயுதம் பதுக்கி வைக்கும் கிடங்குகளாக அம்ரித்பால் சிங் பயன்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
அம்ரித்பால் சிங்கின் சொந்த ஊரான அமிர்தசரசின் ஜல்லுபூர் கேராவில், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் கெடுபிடியை அடுத்து, அம்ரித்பால் சிங்கின் உறவினர் ஹர்ஜித் சிங், கார் டிரைவர் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் சமீபத்தில் போலீசாரிடம் சரணடைந்தனர்.இந்நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிய அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளி பபல்ப்ரீத் சிங் ஆகியோருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்த பெண்ணை, ஹரியானா போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையே, அம்ரித்பாலின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவரும், இவர் தொடர்பான 'வீடியோ'க்களில் உரிய உரிமம் இன்றி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி நின்றவருமான கில் என்பவரை, பஞ்சாப் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு தாக்கிய வழக்கில் இவருக்கும் தொடர்பிருப்பதால், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.