வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தி.மு.க., தலைமை அறிவிப்பு: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருவாரூரில், ஜூன் 3ல், அவரது நுாற்றாண்டு துவக்க விழா மாநாடு நடத்தப்படும். துவக்க விழா மாநாட்டில், காலையில் தமிழக கூட்டணி கட்சித் தலைவர்களும்; மாலையில் தேசிய தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.
டவுட் தனபாலு: கர்நாடக இசை விழாவுலயே, காலை கச்சேரிக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய ரசிகர்கள் தான் வருவாங்க... சாயந்தரம் கச்சேரிகளுக்கு தான், கூட்டம் அலைமோதும்... அந்த மாதிரி, காலையில தமிழக கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், சாயந்தரம் தேசிய தலைவர்களுக்கும், 'ஸ்லாட்' ஒதுக்கி இருப்பதிலேயே, தி.மு.க.,வின் ஓரவஞ்சனை, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
***
தமிழக முதல்வர் ஸ்டாலின்: தி.மு.க., நிர்வாகிகளால், கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படாதவாறு, மாவட்டச் செயலர்கள் பார்த்து கொள்ள வேண்டும். சில இடங்களில் வருந்தத்தக்க சில செயல்கள் நடக்கின்றன; இதை அனுமதிக்காதீர்கள். தேவையில்லாத பிரச்னைகளை பேசாதீர்கள்; வரம்பு மீறி தவறாக பேசுவதை கட்டுப்படுத்துங்கள்.

டவுட் தனபாலு: மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு போடுவது இருக்கட்டும்... தங்களை தினமும் பார்த்துட்டு இருக்கிற சீனியர் அமைச்சர்கள், ஆலந்துார் பாரதி மாதிரி ஆட்களின் வாய்க்கு முதல்ல பூட்டு போட்டீங்க என்றால், 'டவுட்'டேஇல்லாம தங்களை பாராட்டலாம்!
***
தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்: வரி வருவாய் அதிகரித்தாலும், தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. நிதி நிலைமையை சரி செய்து, குடும்ப தலைவியருக்கு, 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம். அறிவித்த பல திட்டங்களுக்கு, நிதி ஒதுக்குவதே கடினமாக இருக்கும் போது, இப்போதைக்கு புதிய திட்டங்களுக்கு வாய்ப்பு இல்லை. எனவே, சட்டசபையில் புதிய திட்டங்களை கேட்டு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்.
டவுட் தனபாலு: அது சரி... 'சட்ட சபைக்கு வந்தோமா... ஸ்டாலினையும், உதயநிதியையும் புகழ்ந்து பேசினோமோ... 'கேன்டீன்'ல பொங்கல், வடை, கேசரி சாப்பிட்டோமான்னு போயிட்டே இருக்கணும்... மறந்தும் கூட தொகுதி பிரச்னைகளை பேசிடக் கூடாது' என்பதை இப்படி நாசுக்கா சொல்றாரோ என்ற, 'டவுட்'தான் வருது!