வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''அமைச்சரின் உறவினர் தயவுல ஆட்டம் போடுதாரு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
![]()
|
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் தாலுகா அலுவலக உயர் அதிகாரியைத் தான் சொல்லுதேன்... இவருக்கு, 'கப்பம்' கட்டாம, இவர் ஏரியாவுல இருக்கிற குவாரிகள்ல இருந்து, ஒரு கல்லைக் கூட எடுக்க முடியாது வே...
''உள்ளூர் அமைச்சருக்கு தரணும்னு ஓப்பனாவே கேட்டு லஞ்சம் வாங்குதாருல்லா... பணம் தராம, எந்த பைலையும் திறந்து கூட பார்க்க மாட்டாரு வே...
''சமீபத்துல மகளிர் தினம் வந்துச்சுல்லா... அதுக்கு, இவரது கட்டுப்பாட்டுல வர்ற வி.ஏ.ஓ., முதல் அலுவலக பெண் அதிகாரிகள் வரை எல்லாருக்கும், சேலை பரிசா குடுத்திருக்காரு வே...
''ஆனா, 'இதுக்கான பணத்தையும் கையில இருந்து குடுத்திருக்க மாட்டாரு... யார்கிட்டயாவது, 'கட்டிங்' போட்டிருப்பார்'னு அலுவலகத்துல பேசிக்கிடுதாவ வே...
''இவர் மேல ஏகப்பட்ட புகார்கள் போயும், ரெண்டு வருஷமா இதே ஊர்ல பெஞ்ச் தேய்ச்சிட்டு இருக்காரு... ஏன்னா, திருச்சியில இருக்கிற சீனியர் அமைச்சரின் உறவினரான ஒன்றியச் செயலரின் ஆதரவு இருக்கிறதால, இவரை அசைக்க முடியல வே...'' என்றார், அண்ணாச்சி.
''முத்துகுமார், போன காரியம் முடிஞ்சிடுத்தோல்லியோ...'' என, நண்பரிடம் விசாரித்த குப்பண்ணாவே, ''அஞ்சு பேரை சுழிச்சிட்டார் ஓய்...'' என்றார்.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கோவை மாநகராட்சியில, நிர்வாகப் பொறியாளர்களுக்கு கண்காணிப்பு பொறியாளர் பதவி உயர்வும், உதவி நிர்வாகப் பொறியாளர்களுக்கு, நிர்வாகப் பொறியாளர் பதவி உயர்வும் வழங்க, 'லிஸ்ட்' தயார் பண்ணியிருக்கா... இவாளது செயல்பாடுகள் பத்தி, கடைசி அஞ்சு வருஷம் கமிஷனரா இருந்தவாளிடம் கருத்து கேட்டு தான் முடிவெடுப்பா ஓய்...
''அப்படி கருத்து கேட்டதுல, 'மாஜி' கமிஷனர் ஒருத்தர், பொறியியல் பிரிவுல அஞ்சு அதிகாரிகள் பத்தி, 'நெகட்டிவ்' அறிக்கை குடுத்து, அவாளது மார்க்கையும் குறைச்சுனுட்டார்... இதனால, பட்டியல்ல இருந்தே அவா பேரை, 'டெலீட்' பண்ணிட்டா... இதுல, ரெண்டு அதிகாரிகளுக்கு, 'ரிட்டையர்' ஆற வரைக்கும் பதவி உயர்வே கிடைக்காதாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''ராஜகோபால், இதையும் கேட்டுட்டு போங்க...'' என, நண்பரை இழுத்து பிடித்த அன்வர்பாய், ''தனி ராஜ்யம் நடத்திட்டு இருக்காரு பா...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார்.
![]()
|
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''உயர்கல்வித் துறையின் முக்கிய புள்ளியிடம், கருணாநிதியின் குடும்ப உறவினரான, ஜூனியர் உதவியாளர் ஒருத்தர் இருக்காரு... துறையின் உயர் அதிகாரியே, இந்த ஜூனியரிடம் அடக்கி தான் வாசிப்பாரு பா...
''அந்த அளவுக்கு, ஜூனியரின் ஆட்டம் கோட்டையில அதிகமா இருக்குது... பல்கலை துணைவேந்தர்கள், பதிவாளர்கள், கல்லுாரி கல்வி இயக்குனர்கள்னு யாராக இருந்தாலும், ஏகவசனத்துல பேசி, காரியங்களை கச்சிதமா முடிக்கிறாரு பா...
''இத்தனைக்கும் துறையின் முக்கிய புள்ளியே, 'ஷார்ட் டெம்பர் பார்ட்டி' தான்... அவரே, ஜூனியரிடம் இதம், பதமாவே நடந்துக்கிறாரு... அந்த அளவுக்கு ஜூனியருக்கு, 'பவர்' இருக்குது பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement