வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:'அதானி' குழுமத்தை அசைத்துப் பார்த்த, 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' நிறுவனம், அடுத்து, புதிதாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இம்முறை, 'டுவிட்டர்' நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டோர்சி நடத்தி வரும் 'மொபைல் பேமென்ட்' நிறுவனமான 'பிளாக்' இதன் இலக்காகி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், கடந்த ஜனவரி 24ம் தேதியன்று, அதானி குழுமத்தின் மீதுபல்வேறு குற்றச்சாட்டுகளுடன் கூடிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு தடாலடியாக கீழே விழுந்து, இன்று வரை மீள முடியாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில், டுவிட்டரின் இணை நிறுவனர் ஜேக் டோர்சி தலைமை ஏற்று நடத்தி வரும் பிளாக் நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் அடுக்கி உள்ளது.கொரோனா காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டிப்பிடித்த இந்நிறுவனத்தின் வணிகத்திற்கு பின்னால், உள்ள 'மேஜிக்' புதுமை அல்ல; மாறாக, நுகர்வோர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான மோசடி செயல்பாடுகளை எளிதாக்குவதாகவும், ஒழுங்குமுறைகளை தவிர்ப்பதற்கு உதவுவதாகவும், முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது என குற்றம் சாட்டி உள்ளது.
மேலும், தொற்று பரவல் காலத்தில் 18 மாதங்களில் இந்நிறுவனத்தின் 'கேஷ் ஆப்' தளம், 639 சதவீத வளர்ச்சியை முறைகேடாக எட்டியதாகவும் தெரிவித்துள்ளது.
பிளாக் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 3.61 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

பிளாக் நிறுவனத்தில், தற்போது தலைமை நிதி அதிகாரியாக உள்ள, இந்தியாவை சேர்ந்த அம்ரிதா அகுஜா மீதும் பங்கு பரிவர்த்தனை சம்மந்தமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் அடுக்கி உள்ளது.
அண்மைக் காலமாக அமெரிக்காவில் வங்கிகள் உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் சரிவைக் கண்டு வரும் நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் இந்த புதிய அறிக்கை, அமெரிக்க நிதி துறையில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.