வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே ஏத்தாப்பூர் சர்வீஸ் சாலையை சேர்ந்த, உதயகுமார் மனைவி விஜயா, 67. அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அங்கு நேற்று காலை, 11:40 மணிக்கு, ஒரு இளைஞர், இளம்பெண் வந்தனர். முத்துமலை முருகன் கோவிலுக்கு வந்ததாக கூறிய அவர்கள், தண்ணீர் கேட்டனர்.
இதனால் கடை அருகே உள்ள வீட்டுக்கு சென்ற மூதாட்டியை, அந்த இருவரும் பின் தொடர்ந்து சென்றனர். தொடர்ந்து விஜயாவை தாக்கி அவர் அணிந்திருந்த, 3 பவுன் தங்க சங்கிலி, 2 பவுன் வளையல்களை பறித்தனர். அவரது காதை அறுத்து ஒரு பவுன் தோட்டையும் கொள்ளையடித்தனர். விஜயாவின் இடதுபுற காதில் படுகாயம் அடைந்ததால், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ. 54.98 லட்சம் தங்கம் பறிமுதல்
ஐக்கிய அரபு நாடான துபாயில் இருந்து, எமிரேட்ஸ் விமானம் நேற்று முன்தினம் சென்னை வந்தது. சந்தேகம் அளிக்கும் வகையில், முனையத்தை விட்டு வெளியேற முயன்ற பயணி ஒருவரை, சுங்க அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.
அப்போது, அவரது ஆசனவாயில் மூன்று பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வெளியே எடுத்து ஆய்வு செய்ததில், 54.98 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,070 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
11 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை; 6 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே பக்திநாதபுரத்தை சேர்ந்த அருள்மிக்கேல் மனைவி உஷாதேவி 62. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மூவரும் திருமணமாகி ஆஸ்திரேலியா, சென்னை உள்ளிட்ட இடங்களில் வசிக்கின்றனர். மார்ச் 20 ல் உஷாதேவி வீட்டில் தனியாக இருந்தார். அவர் வெளியே வராததால் உறவினர் பெண் சென்று பார்த்த போது வீட்டினுள் உஷாதேவி குப்புற விழுந்து கிடந்தார்.

தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை தெரிவித்தார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு விழுந்து இறந்து இருக்கலாம் என குடும்பத்தினருக்கு தகவல் கூறினர். உடலை அடக்கம் செய்வதற்கு முன்னதாக குளிர்சாதனப் பெட்டியில் வைத்தனர். காயங்கள் இருப்பதை பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.
வள்ளியூர் டி.எஸ்.பி.யோகேஷ்குமார் வீட்டு முன் இருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். அதில் பதிவான காட்சிகளை பார்த்த போது சம்பவ நேரத்தில் மாணவர், வீட்டுக்குள் வந்து செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர் பள்ளவிளையைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 1 மாணவர் என உறுதியானது. அவரை பிடித்து விசாரித்த போது அவர் உஷா தேவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'வடக்கன்குளம் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் உஷாதேவி வீட்டிற்கு அடிக்கடி தென்னை மர பராமரிப்பிற்கு வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்றும் அவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் அதிக பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டுக்குள் சென்று உஷாதேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின், கை வளையல் என 11 பவுன் நகைகளை பறித்து சென்றுள்ளார்.
நகை கொள்ளையடித்தது குறித்து தனது அண்ணன் ஜான்சன் உள்ளிட்டோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உதவியுடன் நகைகளை வள்ளியூர், ராதாபுரம் கடைகளில் அடகு வைத்து விலை உயர்ந்த டூவீலர் வாங்கியுள்ளார். மூதாட்டி கொலை, நகை கொள்ளை தொடர்பாக மாணவர், ஜான்சன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மாணவர், நண்பர் உதய பிரகாஷ் 34, அவரது மனைவி சகாயசுபா 31, நண்பர் ரஞ்சித் 20, வீட்டில் வேலை செய்யும் ஜெயா 41, மற்றொரு நண்பர் ஜோர்டான் 20, ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜான்சனை தேடிவருகிறோம், என்றனர்.
கோவை கோர்ட் வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு
கோவை, சூலுார் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் சிவா, 45; லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா, 35. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவிதா மீது ஆர்.எஸ்.புரம், போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு வழக்குகள் உள்ளன.
கணவன்- - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கவிதா ஒரு வாரத்துக்கு முன் பிரிந்து சென்றார். மனைவியை சிவா தேடி வந்தார். இந்நிலையில், கவிதா 2016ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டது சம்பந்தமாக, கோவை முதலாவது குற்றவியல் கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று வந்தார். அந்த தகவல் சிவாவுக்கு தெரிந்தது. அவரும் கோர்ட்டுக்கு வந்தார்.

கணவன்-, மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகளை விட்டுச் சென்றது குறித்து சிவா கேட்டார். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் கவிதா முதலாவது தளத்தில் உள்ள கோர்ட்டுக்கு சென்றார். சிவா அவரை பின் தொடர்ந்து சென்றார். தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதா மீது ஊற்றினார். வலியால் அவர் அலறி துடித்தார்.
அவரது சத்தத்தை கேட்டு அங்கிருந்த வக்கீல்கள் வந்தனர். சிவா தப்பி ஓட முயன்றார். அவரை வக்கீல்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தர்ம அடி கொடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சிவாவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
சிவா தப்பி ஓடியதும் முதலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் இந்துமதி, துரத்திப் பிடித்தார். அவரை, எஸ்.பி., பத்ரி நாராயணன் அழைத்து, பாராட்டி ரூ. 5,000 பரிசு தொகை வழங்கினார்.
சிறுமிக்கு இரண்டு திருமணம்: தந்தை, 'கணவர்கள்' மீது வழக்கு
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவர் தன் 13 வயதான மகளை, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மட்டப்பாறையை சேர்ந்த பிரசாத்துக்கு, 22, இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
பின், அந்த சிறுமியை என்.பஞ்சம்பட்டி சேர்ந்த அழகர்சாமி, 27, என்பவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின், அழகர்சாமியிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிறுமி பிரிந்தார். திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கைக்குழந்தையுடன் சுற்றித்திரிந்த சிறுமியை சமூக நல விரிவாக்க அலுவலர் சிவகாமி விசாரித்த போது, சிறு வயதில் திருமணம் நடந்தது தெரிந்தது. அவர் போலீசில் புகார் செய்தார். அதன் படி, பிரசாத், அழகர்சாமி, சுவாமிநாதன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஓடும் பஸ்சில் நர்சிடம் சில்மிஷம்
புதுக்கோட்டை மாவட்டம், என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி ரேபாகா, 34. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு திருச்சியில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ்சில் பயணித்தார்.
அந்த பஸ்சில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே பூலாஞ்சேரியைச் சேர்ந்த, அரசு பஸ் டிரைவர் சசிகுமார், 37, என்பவரும் பயணம் செய்தார். அப்போது, சசிகுமார் சில்மிஷம் செய்ததாக, நாமக்கல் டவுன் போலீசாருக்கு ரேபாகா தகவல் கொடுத்தார். நாமக்கல் போலீசார், சேலம் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சேலம், புது பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வந்த நிலையில், சசிகுமாரை போலீசார் பிடித்தனர். தொடர்ந்து ரேபாகா அளித்த புகார்படி சசிகுமார், அவருடன் வந்த 38 வயதுடைய மற்றொரு அரசு பஸ் டிரைவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை: 'போக்சோ'வில் போலீஸ்காரர் கைது
உத்தர பிரதேசத்தின் பரேலியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் ஓம் ஷியாம் ஹரி என்பவர் குறித்து, 17 வயது மாணவி, மாவட்ட எஸ்.பி.,யிடம் நேற்று புகார் அளித்தார்.
இதில் கூறப்பட்டுள்ளதாவது: போலீஸ்காரர் ஓம் ஷியாம் ஹரி என்னுடைய மொபைல் போன் எண்ணை வலுக்கட்டாயமாக பெற்றதுடன், அடிக்கடி போன் செய்து பாலியல் தொந்தரவு செய்தார். இதற்காக நான் அவருடைய நம்பரை 'பிளாக்' செய்தவுடன், என் பெயரில் சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு துவக்கி, அதில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டார். இவற்றை நீக்கச் சொன்னபோது என்னை மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
விசாரணையில் மாணவி அளித்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததை அடுத்து, ஓம் ஷியாம் ஹரி மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. 'உடனடியாக கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்ட அவர், பணியில் இருந்தும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்' என எஸ்.பி., தெரிவித்தார்.
'பூட்ஸ்' காலில் மிதிபட்டு சிசு பரிதாப பலி
ஜார்க்கண்டில், கிரிதி மாவட்டத்தில் உள்ள கோஷோதிங்கி கிராமத்தில் வசிக்கும் பூஷன் பாண்டே வழக்கு ஒன்றில் சிக்கிய நிலையில், இவருக்கு எதிராக கைது 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. இதை அவரிடம் தருவதற்காக, நேற்று அதிகாலை பூஷன் வீட்டிற்கு சென்ற ஆறு போலீசார், அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் இருந்த பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை, போலீசாரின் பூட்ஸ் காலடியில் நசுங்கி உயிரிழந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சிசுவின் உடல் உறுப்புகள் பூட்சால் நசுங்கியது உறுதியானதை அடுத்து, இதில் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகள் உட்பட ஆறு போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.
விமானத்தில் குடி போதையில் தகராறு செய்த இருவர் கைது
துபாயில் இருந்து, மும்பைக்கு நேற்று 'இண்டிகோ' விமானம் வந்தது. இதில் பயணித்த இரு நபர்கள், ஏற்கனவே குடிபோதையில் இருந்த நிலையில், விமானத்திலும் தொடர்ந்து மது அருந்தி அநாகரிகமாக நடந்துஉள்ளனர். இதை தட்டிக் கேட்ட சக பயணியர் மற்றும் விமான ஊழியர்களிடமும் இருவரும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து, இந்த இருவர் குறித்து மும்பை விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்புப் படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியவுடன், இவர்கள் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பையில் உள்ள பால்கர் மற்றும் கோலாப்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பியதும் விசாரணையில் தெரிய வந்தது. பின், நீதிமன்றத்தில் இவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதற்கிடையே, பயணத்தில் ஏற்பட்ட அசவுகரியங்களுக்கு, மற்ற பயணியரிடம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.