வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ : பிரதமர் மோடியின் முக்கிய உரைகளை உருது மொழியில் மாற்றம் செய்து, புத்தகமாக அச்சிட்டு, 'மதரசா' மாணவர்களுக்கு வழங்க உத்தர பிரதேச மாநில பா.ஜ., முடிவு செய்துள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இம்மாநில பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் கன்வர் பஷித் கூறியதாவது:
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை, 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சி தமிழில் மனதின் குரல் என அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி வாயிலாக, அன்றாட நிகழ்வுகள், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆலோசனை போன்றவற்றை பிரதமர் வழங்கி வருகிறார். பிரதமரின் இந்த உரைகளை உருது மொழியில் மாற்றம் செய்துள்ளோம். இவற்றை புத்தகமாக அச்சிட்டு, உ.பி.,யில் உள்ள மதரசா எனப்படும் இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத் தரும் பள்ளி மாணவர்களுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம்.
ரம்ஜான் பண்டிகை அன்று புத்தக வினியோக பணியை துவக்கவுள்ளோம். பிரதமரின் கருத்துக்களை இஸ்லாமிய மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்காவே இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.