வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருச்சி: ''தாய் மற்றும் சகோதரிகளின் தகுதியை தீர்மானிக்க நீங்கள் யார்? எதை வைத்து, தகுதியை தீர்மானிக்கிறீர்கள்,'' என்று சீமான் தெரிவித்தார்.
கடந்த 2018ம் ஆண்டு, திருச்சி விமான நிலையத்தில், ம.தி.மு.க.,வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று, அந்த வழக்கு விசாரணைக்காக, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதன் பின், அவர் அளித்த பேட்டி: போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து தாக்கிய எல்லாம் பொது சொத்து சேதப்படுத்துவதில்லை. போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தியவர்களை, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக கைது செய்யவில்லை. ஏதோ பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்து, கைது செய்ததாக காட்டியுள்ளனர்.
ஜனநாயகம் என்பது, பேச்சளவில் மட்டுமே உள்ளது. ஆட்சியில் இருப்பதால், எதிர்ப்பு கருத்து தெரிவிக்க கூடாது என்பது சரியல்ல. எதிர்ப்பு கருத்து பதிவு செய்பவர்களை, கேலிச்சித்திரம் வரைபவர்களை சிறையில் அடைப்பது கொடுமையானது.

என் தாய் மற்றும் சகோதரிகளின் தகுதியை தீர்மானிக்க நீங்கள் யார்? எதை வைத்து, தகுதியை தீர்மானிக்கிறீர்கள். தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமத் தொகை கொடுப்போம், என்று கூறினீர்கள். பொதுத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர், உங்களை வெற்றி பெற வைக்கவில்லை. நாங்கள் தான் வெற்றி பெற வைத்திருக்கிறோம். இன்று, ஆட்சியில் இருக்கும் நாற்காலி, நாங்கள் கொடுத்தது.
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. நாங்கள், காசு கொடுக்க முடியாது; கொடுக்கவும் மாட்டோம். எட்டு சதவீதம் ஓட்டு வைத்திருக்கும் நாங்கள், 15 சதவீதம் ஓட்டு பெறும் போது, மக்களே வெற்றி பெறும் கட்சியின் பக்கம் சென்று விடலாம் என்ற முடிவுக்கு வந்து விடுவார்.
பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக, ராகுலுக்கு தண்டனை கொடுத்திருப்பது வேடிக்கை. மாற்று வருவாய் பற்றி சிந்திக்காமல், டாஸ்மாக் விற்பனையில் இலக்கு நிர்ணயிப்பது, கூடுதலாக இன்னும் குடிகாரர்களை உருவாக்குவதாக அர்த்தம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.