வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை, போயஸ் கார்டன் பகுதியில், மறைந்த ஜெயலலிதாவின் வீடு உள்ளது. அதன் எதிரில் மூன்று மாடிகளுடன் கூடிய பெரிய வீட்டை, சசிகலா தரப்பினர் கட்டியுள்ளனர். தற்போது, தி.நகரில் உள்ள வீட்டில், சசிகலா வசித்து வருகிறார்.
விரைவில், போயஸ் கார்டன் வீட்டில் குடியேற திட்டமிட்டுள்ள சசிகலா, ஆதரவாளர்களை சந்தித்து பேச, அங்கு தனி கூட்ட அரங்கும் கட்டியுள்ளார். முதல் தளத்தில் இளவரசி குடும்பத்தினரும், இரண்டாவது தளத்தில் சசிகலா கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரன் குடும்பத்தினரும் குடியேற உள்ளனர்.
தன் வீட்டின் முன் ஜெயலலிதா சிலை நிறுவ திட்டமிட்டுள்ள சசிகலா, ஆந்திராவில் உள்ள பிரபல சிற்பியிடம் சிலை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். குருபெயர்ச்சிக்கு பின், புதிய வீட்டில் சசிகலா குடியேறி, தீவிர அரசியல் பிரவேசம் செய்ய, அவர் திட்டமிட்டுள்ளதாக, ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலுக்குள் பிரிந்து கிடக்கிற அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து, பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் இடம்பெற சசிகலா விரும்புகிறார். 'விரைவில் சசிகலாவை சந்தித்து பேசுவேன்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளதால், அவரும், சசிகலாவும் சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் அ.ம.மு.க., கூட்டணி அமைத்து போட்டியிடும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரனும் ஏற்கனவே அறிவித்துள்ளார். எனவே, சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் கூட்டு சேர்ந்து, பா.ஜ., தலைமையுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளதாக தெரிகிறது.
- நமது நிருபர் -