வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழக பா.ஜ.,வில் நடக்கும் குழப்பங்கள் குறித்து, தன்னிடம் புகார் தெரிவித்தவர்களிடம், 'பா.ஜ., என்பது நெருப்பில் பூத்த மலர்; வெயிலில் கருகாது' என, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா கூறிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கடும் சொற்களால் விமர்சித்து விட்டு, அக்கட்சியின் ஐ.டி., பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார், கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அதைத் தொடர்ந்து. அண்ணாமலைக்கும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்தது. கடந்த 17-ம் தேதி நடந்த, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 'கூட்டணிக்காக சமரசம் செய்ய வேண்டிய நிலை வந்தால், மாநில தலைவர் பதவியில் இருக்க மாட்டேன்' என கூறியதாக செய்தி வெளியானது.
இதற்கு மாறாக, 'கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவெடுக்கும்' என, வானதி, எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் கருத்து தெரிவிக்க, பா.ஜ.,வுக்குள் நிலவும் குழப்பங்கள் வெட்ட வெளிச்சமாகின.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த உயர் பதவியில் இருப்பவர்கள் உள்ளிட்ட, பா.ஜ., முக்கிய தலைவர்கள் சிலர், சமீபத்தில் தேசிய தலைவர் நட்டாவிடம் பேசியுள்ளனர்.

'சமீப காலமாக தமிழக பா.ஜ.,வில் நடக்கும் நிகழ்வுகளால் கட்சி வளர்ச்சி பாதிக்கும், லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும்' என, தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
'பா.ஜ., கூட்டணியில் உள்ள ஒரே பெரிய கட்சி அ.தி.மு.க., மட்டுமே. அதுவும் வெளியேறி விட்டால், மற்ற மாநிலங்களில் கூட்டணி அமைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம்' என்றும் கூறியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த நட்டா, 'கட்சியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேசிய அளவில் கட்சியின் நலனை கருத்தில் கொண்டே கூட்டணி முடிவு செய்யப்படும். அதுபற்றி இப்போது பேச வேண்டாம்.
'பா.ஜ., என்பது நெருப்பில் பூத்த மலர். எனவே, வெயிலில் ஒருபோதும் கருகி விடாது. நாம் சந்திக்காத நெருக்கடிகள் இல்லை. லோக்சபா தேர்தல் வெற்றியை மனதில் வைத்து பணியாற்றுங்கள்' என அறிவுறுத்தியதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.