கூடலுார்: முதுமலையில் எடுக்கப்பட்ட, 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்று ஆவண படத்துக்கு கிடைத்த ஆஸ்கார் விருதை கையில் பெற்று பார்த்தது வாழ்வில் மறக்க முடியாத தருணம்' என, பொம்மன், பெல்லி தம்பதி கூறினர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காட்டில், குட்டியானைகள் அதன் பாகன்கள் இடையேயான பாச பிணைப்பை மையமாக வைத்து, ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கன்சால்வஸ் என்பவர் எடுத்த, 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்துக்கு, 'ஆஸ்கார்' விருது கிடைத்தது.
அதில், தத்ரூபமாக நடித்த முதுமலை யானை பாகன் பொம்மன், அவரது மனைவி பெல்லி ஆகியோரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற பின் மும்பை வந்த இயக்குனர் கார்த்திகி கன்சால்வஸ், முதுமலை யானை பாகன் தம்பதிகள் பொம்மன், பெல்லியை மும்பைக்கு அழைத்தார். அதை ஏற்று அவர்கள் நேற்று முன்தினம் கோவையில் இருந்து, விமானத்தில் மும்பை சென்றனர். மும்பையில் அவர்களை நேரில் சந்தித்த இயக்குனர், 'ஆஸ்கார்' விருதை கையில் கொடுத்து பாராட்டினர். அப்போது அவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
யானை பாகன் தம்பதி பொம்மன், பெல்லி ஆகியோர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,''எங்களுக்கு கிடைத்துள்ள இந்த புகழ் படத்தின் இயக்குனரை சாரும். விருதை கையில் பெற்றது நெகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வு வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. மும்பையில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு எங்களை அழைத்துள்ளனர்,'' என்றனர்.