முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த இளைஞர், தேசிய நெடுஞ்சாலையில், பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இச்சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழகம், வன்முறைப் பாதையில் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படியே அறிக்கை விட்டா மட்டும் போதுமா... தமிழக அரசுக்கு எதிராக, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் காட்டலாமே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழக கிராம பகுதிகளில், ஆண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில், 53 சதவீதம் மட்டுமே, பெண் கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது, தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துஉள்ளது. இது பெரும் அநீதி. ஆண்களும், பெண்களும் ஒரே வேலையை, ஒரே கால அளவுக்கு செய்கின்றனர். ஆனால், ஆண்களின் கூலியில் கிட்டத்தட்ட பாதியை மட்டும், பெண்களுக்கு வழங்குவது நியாயமல்ல. வளர்ந்த மாநிலங்கள் என்று போற்றப்படும், தமிழகம், கேரளாவிலும் இத்தகைய அநீதி தொடர கூடாது.
அநீதி, அங்க மட்டும் தான் நடக்குதா...? அரசியலில் கூட, தலைவர்களுக்கு பெண் வாரிசுகள் இருந்தாலும், ஆண் வாரிசுகள் தானே, தலைமை பீடத்துக்கு வர முடிகிறது!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை:
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து செய்தி, மிகுந்த வேதனையை அளிக்கிறது. காயமடைந்தோருக்கு தரமான சிகிச்சையும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமும், உடனடியாக வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

அப்பாடா... கட்சியின் தலைவருங்கிற முறையில, ஒரு சம்பிரதாய அறிக்கையை தட்டி விட்டாச்சு... அடுத்து, 'ஷூட்டிங்' கிளம்பிட வேண்டியது தான்!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
தமிழகத்தில் உள்ள, 29 சுங்கச் சாவடிகளில், ஏப்., 1 முதல் சுங்கக் கட்டணம், 55 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளதாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது லாரி உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால், சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பதன் விளைவாக, உணவு தானியங்களின் விலை உயரக் கூடுமோ என்ற அச்சம், மக்கள் மனதில் எழுந்துள்ளது.
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுக்கு, சுங்கக் கட்டணமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை!