சென்னை : மின்சார வேலியில் சிக்கி, யானைகள் பலியாவது தொடர்பாக, முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், மின் வாரிய தலைவரும், ஏப்., 19ல் ஆஜராகி விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, வழக்கறிஞர் சொக்கலிங்கம், விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் ஆகியோர், 'தர்மபுரியில், மின்சார வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியாகின; உயிர் தப்பிய இரண்டு குட்டிகளையும், யானைக் கூட்டத்துடன் சேர்க்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என, கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ''இரு யானை குட்டிகளும், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், ஆண் யானை உடன் சேர்ந்துள்ளன. இதுகுறித்து, புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
இதையடுத்து, விசாரணையை, ஏப்., 19க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
மின்சார வேலியில் யானைகள் சிக்கி பலியாவதை தடுக்க, விதிமுறைகளை அமல்படுத்தாதது குறித்தும், தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்களை அகற்ற உத்தரவிட்டிருந்தும், எப்படி இந்த சம்பவங்கள் நடக்கின்றன என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கும், மின் வாரிய தலைவருக்கும், நிர்வாக இயக்குனருக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.