குழந்தை, தாய் தற்கொலை
வேலுார்: வேலுார் மாவட்டம், பென்னாத்துார் அடுத்த கேசவபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன், 34. இவரது மனைவி சத்தியா, 27. இவர்களது 2 வயது பெண் குழந்தை கீர்த்திகா. மணிவண்ணன், தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்தார். மனமுடைந்த சத்தியா, நேற்று முன்தினம் மாலை, குழந்தையை கொன்று விட்டு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூ.1
திருநெல்வேலி: மாநிலத்தில் முதன் முறையாக நெல்லை மாநகராட்சியில் காலி தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால், 1 ரூபாய் வழங்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் இந்த திட்டம் நேற்று முதல் துவக்கப்பட்டுள்ளது.
முன்ஜாமின் மனு தள்ளுபடி
மதுரை: 'நியூ ரைஸ் ஆலயம் சுமால் பைனான்ஸ்' நிதி நிறுவனத்தின், 300 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அதன் நிர்வாகிகள் 24 பேரின் முன்ஜாமின் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரர்கள், தலா 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் 'டிபாசிட்' செய்ய நிபந்தனை விதித்தார். இதனால், மனுக்களை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பு தெரிவித்தது. நீதிபதி மனுக்களை தள்ளுபடி செய்தார்.
முதல்வருக்கு மறுப்பு
கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி அருகே, காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை வழக்கில், கைதான சங்கர், அ.தி.மு.க.,வில் எந்த பொறுப்பிலும் இல்லை' என, கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
'நேற்று சட்டசபையில் பேசிய, தமிழக முதல்வர் ஸ்டாலின், கொலை வழக்கில் கைதான சங்கர், அ.தி.மு.க., கிளைச்செயலர் என பொய்யான தகவல் அளித்துள்ளார். இதை, வன்மையாக கண்டிக்கிறேன்' என, அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
மூதாட்டி கொலை: 6 பேர் கைது
திருநெல்வேலி: கடந்த 20ல், நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி உஷாதேவி, 62, என்பவரை கொன்று, 11 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கில் பிளஸ் 1 மாணவர் உட்பட ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து, மாணவர் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறு பேரை கைது செய்தனர்.