வெயில் காலம் தொடங்கி விட்டது. இனிமேல் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து வேலைக்குச் செல்வோர், வெளியில் செல்வோர், பயணம் மேற்கொள்வோர் என அனைவரும், கடைகளில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி குடிப்பதற்குப் பதிலாக வீட்டிலிருந்தே பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் செல்வோம். இதிலும் சிலர் வெந்நீரை ஆற வைத்து வடிகட்டி பாட்டிலில் எடுத்துச் செல்வோம்.
குறிப்பாக கொரோனா பரவல் அதிகரித்ததிலிருந்து நாம் உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். இந்நிலையில், தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில், கழிப்பறை இருக்கையை விட அதிக கிருமிகள் உள்ளன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் நம்பி தான் ஆக வேண்டும். நாம் பயன்படுத்தும் மறு உபயோகம் கொண்ட தண்ணீர் பாட்டிலில் 40ஆயிரம் மடங்கு மோசமான பாக்டீரியாக்கள் உள்ளதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
குடிநீர் தேவைக்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில் கிராம்-நெகட்டிவ் தண்டுகள் மற்றும் பேசிலஸ் என்னும் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை இரைப்பை குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளாகும் என்று வாட்டர்பில்டர்குரு (waterfilterguru.com) என்ற ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேசிலஸ் குடல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் பெயர்பெற்றது என்றாலும், கிராம் நெகட்டிவ் பாக்டீரியா நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், ஒரு தண்ணீர் பாட்டிலில் சராசரியாக 20.8 மில்லியன் சிஎப்யூ-க்கள் உள்ளது எனக் கண்டறிந்துள்ளனர். இதுவே ஒரு கழிப்பறை சீட்டில் 515 சிஎப்யூ-க்கள் தான் இருக்குமாம். இதில் கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
மற்றொரு உதாரணமாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களில் கணினி மவுஸில் இருக்கும் பாக்டீரியாவை விட நான்கு மடங்கு அளவு பாக்டீரியாக்கள் உள்ளன. மேலும் இது செல்லப்பிராணிகள் சாப்பிடும் கிண்ணத்தை விட 14 மடங்கு அதிகம் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே, உங்கள் தண்ணீரை எப்படி, எங்குச் சேமிக்கிறீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், தண்ணீர் பாட்டிலை ஒரு நாளைக்கு ஒரு முறை கழுவி, வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே அடுத்த முறை சுத்தமான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடித்தாலும் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உங்கள் தண்ணீர் பாட்டிலைச் சோதனை செய்வது அவசியமாகும்.