வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் மனு அளித்தன. இந்த மனு மீதான விசாரணை ஏப்.,5க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற தன்னிச்சையான அமைப்புகள் மூலமாக பா.ஜ., ஒடுக்க நினைப்பதாக பல கட்சிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு மத்திய அரசை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையில் 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், முக்தி மோர்சா, கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் கூட்டாக மனு அளித்தன. அதில், ‛எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
அந்த அமைப்பின் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீது போடப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, ஏப்.,5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.