தரணி போற்றும் தஞ்சைக்குப் பெருமை சேர்க்க ஏராளமான சிறப்புகள் உள்ளன. பெரிய கோவில், தலையாட்டி பொம்மை, அரண்மனை, பசுமை வயல்கள், நெற்களஞ்சியம் என அடுக்கி கொண்டே செல்லலாம். இப்படிப்பட்ட தஞ்சையில் தரமான உணவுப் பண்டங்களுக்கும் பஞ்சமில்லை. இதில் ஒன்று தான் தவல வடை.
தஞ்சைக்குரிய சுவையுடன் தயாராகும் இந்த தவல வடையை ஒருமுறை சுவைத்தால், மறுமுறை சுவைக்க ஆவலைத் தூண்டும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1/2 கப்
துவரம் பருப்பு - 1.1/2 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 4ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 3/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
![]()
|
அரிசி மற்றும் பருப்புகளை நன்றாகக் கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் அரிசி, பருப்பு, மிளகு, உப்பு, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வடை செய்யும் பதத்திற்கு அரைக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
அதனுடன் மாவைச் சேர்த்து நீர் வற்றும் வரை வேக வைத்து இறக்க வேண்டும். மிதமான சூட்டில் மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, மாவு உருண்டையை தட்டையாக தட்டி நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து கல் சூடானதும் அதில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் தடவி மாவைப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான தஞ்சாவூர் 'தவல வடை' தயார்.