வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: ‛அதிமுக உடனான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, தேசிய தலைமையே கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.எந்தவொரு எம்.பி.,க்கும் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டால் அவருடைய பதவி ‛சஸ்பெண்ட்' ஆகும் என்பது விதி.
அப்படியிருக்கையில் வேண்டுமென்றே அவரது பதவியை பறிக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் திசை திருப்புகிறது. சமீபத்தில் லண்டன் சென்றபோதும் ராகுல், ஜனநாயகம் பற்றி அவதூறாக பேசினார்.

கூட்டணி
தமிழகத்தில் பா.ஜ.,வை வலுப்படுத்துவதே நோக்கம். ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பா.ஜ., வளர வேண்டும். பா.ஜ., தலைவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட கருத்து மோதல் இல்லை. பா.ஜ., வேகமாக வளர வேண்டும் என நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றோம்.
கட்சிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. கட்சியை வலுப்படுத்த நினைக்கும்போது சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம்தான். பா.ஜ.,வுக்கும், எனக்கும் தனிப்பட்ட கட்சி தலைவர்கள் மீது மோதல் இல்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேசிய தலைமையே கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும்.
அரசை கேலி செய்யும் மீம்கள், வீடியோக்களுக்காக எல்லாம் திமுக அரசு கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. மணீஷ் சிசோடியா கைதின்போது, ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ., நசுக்குவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அப்படி இருக்கையில், ராகுல் மீதான தீர்ப்புக்கு இவர்கள் (ஸ்டாலின்) ஜனநாயகம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.