ஸ்போர்ட்ஸ் ஷூ தயாரிப்பாளரான கேம்பஸ் நிறுவனம் கடந்த 2022 மே மாதம் பங்குச்சந்தைக்கு வந்தது. இந்நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (மார்ச் 24) ஒரு பிளாக் டீலில் விற்பனை நடந்ததால், பங்கின் விலை 8 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டது.
கேம்பஸ் ஆக்டிவியர் நிறுவனம் மதிப்பு மற்றும் விற்பனை அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடர்பான காலணி பிராண்டுகளில் ஒன்று. கடந்த மே மாதம் இவர்கள் பங்குச்சந்தைக்கு வந்தனர். அப்போது பங்கு விலை ரூ.292 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஐ.பி.ஓ., வெளியீட்டு தேதி அன்று சுமார் 20 சதவீதம் லாபத்தில் பட்டியலானது. அக்டோபர் 2022 வரை பயங்கர வளர்ச்சி கண்டது. பங்கு விலை சுமார் 70% வளர்ந்தது.
![]()
|
அந்த வகையில் இன்று புதிய வீழ்ச்சியை கேம்பஸ் ஆக்டிவியர் பங்குகள் கண்டுள்ளன. இந்த பங்குகளில் டிபிஜி நிறுவனம் 7.62% பங்குகளை வைத்துள்ளது. மற்றொரு பெரிய வெளிநாட்டு முதலீட்டாளரான குவைத் முதலீட்டு ஆணைய நிதி 1.27% பங்குகளை கொண்டுள்ளது. இவர்கள் தங்கள் பங்குகளை விற்பதற்கு பார்ப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
![]()
|
இந்நிலையில் பிளாக் டீல் மூலம் இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளது. விற்றவர்கள், வாங்கியவர்கள் பற்றிய தகவல் உடனடியாக தெரியவரவில்லை. ஆனால் அவர்கள் சந்தை மதிப்பை விட பங்கு ஒன்றின் விலையை ரூ.345 என 6.5% தள்ளுபடியில் விற்றுள்ளனர்.
இன்று 10 மணி அளவில் கேம்பஸ் நிறுவனப் பங்கு முந்தைய நாள் விலையை விட 8 சதவீதம் குறைந்து ரூ.339-க்கு வர்த்தகானது. பின்னர் அதிலிருந்து சுமார் 1 சதவீதம் உயர்ந்து அதே நிலையில் நீடிக்கிறது. இந்நிறுவனப் பங்கு கடந்த 6 மாதத்தில் 40% சரிந்துள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவுகளின் படி, கேம்பஸ் ஆக்டிவியர் நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ.465 கோடி. மூலப்பொருட்களுக்கான செலவு ரூ.200 கோடி. ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட இதர செலவுகள் ரூ.134 கோடி. தேய்மானம் ரூ.19.56 கோடி. நிகர லாபம் ரூ.48.31 கோடி ஆகும். இது முந்தைய செப்டம்பர் காலாண்டில் ரூ.14.5 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் ரூ.23.53 கோடி ஆகும். அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது லாபம் 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.