வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாரணாசி: இந்தியாவில் 2025ம் ஆண்டிற்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி ரூ.1,780 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் உலக காசநோய் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த ஒன்பது ஆண்டுகளில், காசநோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியா, ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், புத்தாக்கத்தின் மூலம் சிகிச்சை, தொழில்நுட்பத்தின் முழுப் பயன்பாடு, ஆரோக்கியம், நோய் தடுப்பு, பிட் இந்தியா, யோகா போன்ற பல முன்னெடுப்புகளை செய்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் மூலம் நோயாளிகளை இணைத்துள்ளோம், காசநோய் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். மேலும் காசநோயாளிகள் அதிகம் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தியுள்ளோம். கிராமத்தில் ஒரு காசநோயாளி கூட இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் செயல்படுகிறோம். உலகம் முழுவதும் காசநோயை ஒழிக்க 2030ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் 2025ம் ஆண்டிற்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுகிறோம். 80 சதவீத காசநோய் மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.