அடிக்கும் வெயிலுக்கு எங்கேயாவது தண்ணீரில் மூழ்கி இருந்தால் பரவாயில்லை எனத் தோன்றவது இயல்பு. வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், நம்மை மட்டுமல்ல, நாம் வளர்க்கக்கூடிய செடிகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது. சிறிய சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தினால், செடிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இதோ சில டிப்ஸ்...
கோடையின் வெப்பத்தை தணிக்க செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது அவசியமே. ஆனால், சரியான அளவு இருக்க வேண்டும். காலை, மாலை இரு வேளையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். மதிய வேளையில் ஊற்றும் போது, சூடான தண்ணீர் வேர்களுக்கு செல்வது நல்லதல்ல; அதேவேளையில் ஊற்றும் தண்ணீரில் பாதியளவு வெப்பத்தால் ஆவியாகி வெளியேறக்கூடும். எனவே, வாரம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது நன்றாக, ஆழமாக வேர்களுக்கு செல்லுமாறு தண்ணீர் ஊற்றலாம்.
![]()
|
அதிகளவிலான தண்ணீர் செடிகளுக்கு நல்லதல்ல. தண்ணீர் அதிகமானால் வேர்ப்பகுதி அழுகக்கூடும் அல்லது பூஞ்சை தொற்று ஏற்படக்கூடும். வெயில் காலத்தில் செடிகளில் இலைகள் சிறிது வாட்டமாக இருக்கக்கூடும். இதற்காக அதிகளவில் தண்ணீர் விடக்கூடாது. மாலை வேளையில் செடிகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பக்கூடும். எனவே, மண்ணின் ஈரப்பதத்தை சரிபார்க்கவும்.
செடிகளின் வேர்ப்பகுதியை வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் மண்ணை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு இலைகள், வெட்டப்பட்ட புற்கள் மற்றும் தேங்காய் நார் ஆகியவற்றை வேர்ப்பகுதியை ஒட்டி, மண்ணின் மேற்பகுதியில் ஆறு இன்ச் வரை பரப்பி வைக்கலாம். இதனால், நீண்ட நேரத்துக்கு மண் ஈரப்பதமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பத்தின் காரணமாக தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற செடிகள் சரிவர பூக்காது; செடிகளும் கருகிவிட வாய்ப்புள்ளது. எனவே, செடிகளுக்கு போதிய நிழல் வசதியை அளிக்க வேண்டும். மெல்லிய துணியை பயன்படுத்தி எளிய பந்தல் போன்ற அமைப்பை ஏற்படுத்தும் போது செடிகளுக்கு பாதிப்பின் தன்மை குறைய வாய்ப்புள்ளது.
![]()
|
கோடையில் வெப்பத்தை தாங்கும் செடிகளுக்கு முக்கியத்தும் அளித்து வளர்க்க வேண்டும். தண்ணீரும், உரமும் போதியளவு கிடைத்தால், வெள்ளரி, மிளகாய், தக்காளி, கத்தரி, தர்பூசணி போன்ற செடிகள் தொட்டிகளிலும் நன்றாக வளரும். சாமந்தி, போகன்வில்லா, ரோஜா போன்ற பூச்செடிகளும் கோடை காலத்தில் நன்றாக வளரக் கூடியவை.