புதுடில்லி: ராகுலின் எம்.பி., பதவியை தகுதி நீக்கம் செய்வதாக லோக்சபா செயலாளர் உத்தரவிட்டுள்ளதற்கு காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மோடி எனும் சமுதாயத்தை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலை குற்றவாளி என தீர்ப்பளித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதனையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன்படி அவரை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக லோக்சபா செயலர் உத்பால்குமார் சிங் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி:
ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இந்த நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் வீதி முதல் பார்லிமென்ட் வரை தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயகத்தை காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். இச்சதி வேலைகளுக்கு மத்தியிலும், அவர் தொடர்ந்து போராடுவார். மோதல் தொடர்கிறது.
காங்., எம்.பி., ஜெய்ராம் ரமேஷ்:
ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்த்து சட்ட, அரசியல் ரீதியாக போராடுவோம். எங்களின் குரலை நசுக்க முடியாது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். பார்லி., கூட்டுக்குழு விசாரணை மற்றும் பிரதமர் மோடிக்கும் அதானிக்குமான தொடர்பு போன்றவற்றை மறைக்க ராகுல் தகுதி நீக்கப்பட்டுள்ளார். இது இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.
மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பிரித்விராஜ் சவான்:
ராகுலை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எந்தவொரு எம்.பி.,யையும் நீக்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றம் 6 மாதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை விதித்திருக்கலாம்.
ஆனால் 2 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது. அவர்களின் திட்டப்படி, இன்று அதனை செயல்படுத்தியுள்ளனர். இந்த செயலை கண்டிக்கிறேன். ராகுலுக்கு நரேந்திர மோடி எவ்வளவு பயப்படுகிறார் என்பதையே இது காட்டுகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே:
ராகுலை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளையும் பா.ஜ., செய்தது. உண்மையை பேசுபவர்களை பா.ஜ., விரும்பவில்லை.
ஆனால் நாங்கள் தொடர்ந்து உண்மையைப் பேசுவோம். பார்லி., கூட்டுக்குழு விசாரணையை தொடர்ந்து கோருவோம். ஜனநாயகத்தை காப்பாற்ற தேவைப்பட்டால், சிறைக்கும் செல்வோம். இது சம்பந்தமாக எங்கள் மூத்த தலைவர்களுடன் கட்சி அலுவலகத்தில் ஆலோசிக்க உள்ளோம். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம்.
காங்., எம்.பி., கே.சி.வேணுகோபால்:
பிரதமர் மற்றும் அதானிக்கு எதிராக ராகுல் கேள்வி எழுப்பிய நாளில் இருந்து ராகுலின் குரலை நசுக்க இதுபோன்ற சதியை துவங்கிவிட்டனர். இது பா.ஜ., அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கு.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி:
பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பா.ஜ.,வின் பிரதான இலக்காக மாறியுள்ளனர். கிரிமினல் பின்னணி கொண்ட பா.ஜ., தலைவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுகின்றனர்,
ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினால் தகுதி நீக்கம் செய்கின்றனர். இன்று, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் வீழ்ச்சியை கண்டுள்ளோம்.
காங்கிரஸ் எம்.பி., ரஞ்சன் சவுத்ரி:
ராகுலுக்கு எதிரான மோடி அரசின் பழிவாங்கும் அரசியலை நாடே பார்க்கிறது. குறிப்பாக பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின்னர் ராகுல் பிரபலமடைந்து வருவதை மோடி அரசாங்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் அவரை பழிவாங்குகின்றனர்.
கர்நாடக மாநில காங்., தலைவர் சிவக்குமார்:
ராகுலை பார்லி., இருக்கையில் இருந்து நீக்கலாம் ஆனால் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயத்தில் இடம் பெற்றுள்ள இருக்கையில் இருந்து அவரை நீக்க முடியாது. பா.ஜ.,வின் ஜனநாயக விரோத போக்கை நான் வெறுக்கிறேன்.
மஹா., முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே:
ராகுலின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. திருடன், திருடன் என்று அழைப்பது நம் நாட்டில் குற்றமாகிவிட்டது. திருடர்களும் கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள். ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்தை கொலை செய்துள்ளனர். அனைத்து அரசு அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன. இது சர்வாதிகாரத்தை முடிவு கட்டுவதற்கான துவக்கம். எதிர்த்து போராடுவது மட்டுமே நல்ல முடிவை கொடுக்கும்.
முதல்வர் ஸ்டாலின்
ராகுல் மீதான நடவடிக்கைக்கு கடும் கண்டனம். இந்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். ஜனநாயக முற்போக்கு கூட்டணி மீதான தாக்குதல் இது. ராகுலை பார்த்து பா.ஜ., தலைமை பயந்திருக்கிறது என்பது இந்த நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எம்.பி.,க்கு கூட கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை இல்லை என்ற மிரட்டும் தொனியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பார்லியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் கேள்வி கேட்டவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும்.
திமுக எம்.பி., கனிமொழி:
லோக்சபாவில் இருந்து ராகுலை தகுதி நீக்கம் செய்தது, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கக நினைக்கும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். ஜனநாயகத்தின் கொள்கைகளை மதிக்காத சக்திகளுக்கு எதிரான நமது குரல்கள் சத்தமாக மாறும், நமது பிணைப்பு மேலும் வலுவடையும்.
தமிழக அமைச்சர் உதயநிதி:
தேர்தல் பேச்சு தொடர்பாக பா.ஜ.,வினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரசின் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும், எம்.பி., பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, பாசிஸ்டுகளை அச்சமூட்டியுள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:
ராகுலின் நடை பயணம் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து, அவரை தகுதிநீக்கம் செய்துள்ளார்கள். இதற்கு பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.