புதுடில்லி: 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதற்காக காங்கிரஸ் எம்.பி., ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன், ஜெயலலிதா, லாலு பிரசாத் உள்ளிட்ட பல தலைவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு8(3)ன்படி, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., 2 ஆண்டுகளுக்கு குறையாமல் அல்லது அதற்கு மேல் கிரிமினல் வழக்கில் சிறை தண்டனை பெற்றால், அந்நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், அவர் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதாக கபில் சிபல் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
ஜெயலலிதா
முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2014ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் முதல்வர் பதவியை இழந்தார்.
லாலு பிரசாத் யாதவ்
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லால் பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், கடந்த 2013ம் ஆண்டு எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.
அசம்கான்
சமாஜ்வாதி கட்சியின் அசம்கான், கடந்த லோக்சபா தேர்தலின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்தலில், 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், அசம்கானின் எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்டது.

லட்சத்தீவு எம்.பி.,
கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு தொகுதி எம்.பி.,யான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., முகமது பைசலுக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தண்டனையை எதிர்த்து முகமது பைசல் மேல்முறையீடு செய்தார். அப்போது, தண்டனையை நிதிமன்றம் நிறுத்திவைத்ததால், இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
இவர்களை தவிர ராஜ்யசபா எம்.பி.,யான ரஷீத் மசூத், எம்எல்ஏ., ஆக இருந்த அப்துல்லா அசம்கான் உள்ளிட்டோரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.