மாத்திரை என்றால் என்ன?
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவர் இயல்பாக கண் இமைக்கும் நேரத்தைக் குறிக்கும் அளவு. எழுத்துகள் ஒலிக்கப்படும் கால அளவைக் குறிக்க மாத்திரை பயன்படுகிறது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நமது கண் இமைகள் நம்மையறியாமல் மூடித் திறக்கும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக் கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.
மாத்திரை விதிகளை விரிவாகப் பார்ப்போமா?
குறில் எழுத்துகளுக்கு மாத்திரை ஒன்று (உதாரணம்: அ, இ, ப, கி, மு)
நெடில் எழுத்துகளுக்கு மாத்திரை இரண்டு (உதாரணம்: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
க்+அ= க
மெய்யெழுத்துக்கு அரை மாத்திரை, உயிரெழுத்துக்கு ஒரு மாத்திரை என்பது கணக்கு. ஆனால் மேற்கண்ட 'க' என்னும் உயிர்மெய் எழுத்துக்கு ஒரு மாத்திரையே வரும். எப்படி தண்ணீரில் போட்ட சர்க்கரை கரைந்துவிடுகிறதோ அதேபோல 'க்' என்கிற மெய்யானது, 'அ' என்கிற உயிரில் கரைந்துவிடுகிறது. இதேபோல மாத்திரையில் பல வேறுபாடுகள் உள்ளன.
![]()
|
தனி மெய்யெழுத்துகள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும். உயிரளபெடை மூன்று மாத்திரையளவும், ஒற்றளபெடை ஒரு மாத்திரையளவும் ஒலிக்கும். ஔகாரக்குறுக்கம், ஐகாரக்குறுக்கம் என்பன ஒன்று அல்லது ஒன்றரை மாத்திரையளவு ஒலிக்கும். மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும்.