வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுல் கிண்டல் செய்த ' மோடி' எனும் ஜாதியினர், கடந்த 600 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் இருந்து குஜராத்தில் குடியேறியது தெரியவந்துள்ளது.
'மோடி' எனும் ஜாதியினர் முதலில் நாடோடி பழங்குடியினராக இருந்துள்ளனர். இவர்கள், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ம.பி., உள்ளிட்ட மாநிலங்களிலும் வசிக்கின்றனர். வட மாநிலங்களில் இருந்து கடந்த 15 அல்லது 16ம் நூற்றாண்டில் குஜராத்திற்கு குடிபெயர்ந்தனர். 1994ம் ஆண்டு அங்கு அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் ஞானஷியாம் ஷா கூறுகையில், குஜராத்திற்கு வந்த பிறகு அவர்கள் மாநிலம் முழுவதும் படிப்படியாக பரவினர். நிலக்கடலை மற்றும் எள்ளை அரைத்து எண்ணெய் ஆக்கி அதனை விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டனர். எண்ணெய் தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டதால் அவர்கள், 'பானியா' என்ற ஜாதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டனர்.
அதேநேரத்தில், வணிக சமுதாயமாக பார்க்கப்பட்ட அவர்கள், எப்போதும் ஜாதிரீதியான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டது கிடையாது. அவர்கள் தயாரிக்கும் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தாத காரணத்தினால், 'மோடி ' எனும் ஜாதியினரின் பொருளாதாரம் உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத்தை சேர்ந்த அச்யுத் யாக்னிக் என்ற எழுத்தாளர் கூறுகையில், 'மோடி' என்ற ஜாதியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று, பானியா வணிகர்கள் சமுதாயம். மற்றொன்று டெலி கான்ச்சி நாடோடி பழங்குடியினர். இவர்கள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பானியா பிரிவினரின் பொருளாதார நிலை காரணமாக சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைத்தது. இவர்கள் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். முக்கியமாக வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை மற்றும் கடன் கொடுப்பதில் அவர்களின் பங்கு அதிகம் இருந்தது.
இன்றைய நீரவ் மோடிக்கள், பண்டைய பானியா மோடி சமுதாயத்தினரின் வழித்தோன்றல்கள். அவர்கள் தங்கள் வணிகத்தை சிறிய பொருட்களில் இருந்து அதிக விலை உயர்ந்த முக்கிய தயாரிப்புகளுக்கு மட்டுமே மாற்றி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.