கோவில் வாயிலில் மழை நீர் பக்தர்கள் அவதி
திருவாலங்காடு ஊராட்சி, பராசக்தி நகரில், சாட்சிபூதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் குறைந்தது, 100 பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலின் வரலாற்றை தாங்கி நிற்கும் இந்த கோவிலுக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி பள்ளமாக உள்ளதால், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, இந்த இடத்தை இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவு சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.மகேஷ், திருவாலங்காடு.
குடியிருப்பில் தேங்கும் மழை நீர் நோய் பரவும் அபாயம்
திருத்தணி நகராட்சி, முருகப்ப நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ரெட்டிக்குளம் அருகே மழை நீர் வடிகால்வாய் இல்லாததால், மழை பெய்தால் குடியிருப்பு பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது.
மேலும், கழிவு நீரும் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், கால்வாய் அமைக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழையால், மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. எனவே, மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, தேங்கிய மழை நீரை அகற்றி, மழை நீர் வடிகால்வாய் அமைக்க வேண்டுகிறேன்.
- -எஸ்.வெங்கடேசன், முருகப்ப நகர்.