திருவாலங்காடு:திருவாலங்காடு -- பேரம்பாக்கம் நெடுஞ்சாலை, 13 கி.மீ., நீளமும் 50 அடி அகலமும் கொண்டது.
இந்த நெடுஞ்சாலை வழியாகவே பாகசாலை, சின்னமண்டலி, எல்.வி.புரம், களாம்பாக்கம் உட்பட, 20 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மணவூர் ரயில் நிலையம், திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம், மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மணவூரில் இருந்து எல்விபுரம் வரை 3 கி.மீ., துாரத்திற்கான தார்ச்சாலை, 15 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலையின் இருபுறமும், 3 அடி ஆழத்திற்கு பள்ளமாக காட்சியளிக்கிறது.
இதனால், இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் வந்தால், எதிரே வரும் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், ஒதுங்கி நிற்க இடமின்றி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, கீழே பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதில், உயிரிழப்பு நிகழும் அபாயமும் உள்ளது.
எனவே, இந்த பகுதியில் விபத்தை கட்டுப்படுத்த, மணவூர்- - எல்விபுரம் வரை, சாலையின் இருபுறமும் தடுப்பு அமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.