திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், எல்.வி.புரத்தில் கொசஸ்தலையாற்றை மக்கள் கடந்து செல்ல, தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த தரைப்பாலம், கடந்தாண்டு பெய்த கன மழையால், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து செல்லப்பட்டது.
இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மணவூர் செல்ல வேண்டிய நிலையில் உள்ள எல்.வி.புரம் மக்கள், பாகசாலை வழியாக, 8 கி.மீ., துாரம் சுற்றி சென்று வருகின்றனர்.
இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், அவசரமாக மருத்துவமனைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆற்றில் வெள்ளம் குறைந்த நிலையில், தற்காலிக தரைப்பாலம் மீண்டும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக தரைப்பாலம் உருளை மீது மண் கொட்டி அமைக்கப்பட்டிருந்த நிலையில், மண் சரிந்து தற்போது பள்ளம் மேடாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர்.
மேலும், இருசக்கர வாகனம் மட்டுமே செல்லும்படி அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலத்தில், வாகன ஓட்டிகள் சுற்றி சென்று அவதியடைகின்றனர்.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, புதிதாக உருளைகள் கொண்டு, 25 அடி அகலத்திற்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.