ஆர்.கே.பேட்டை:மலைப்பிரதேசத்தை ஒட்டிய கிராமத்தினர், தங்களின் கால்நடைகளை மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்கின்றனர்.
மலைப்பாதை தற்போது சேதம் அடைந்து மோசமாக உள்ளதாக, அப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அருகே, ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது, மகன் காளிகாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் மேற்கு மற்றும் வடக்கு பகுதி முழுதும் மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளது.
இந்த மலைப்பகுதியில், கால்நடைகள் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றன. மலையடிவாரத்தில், தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், புதுப்பேட்டை முதல் அம்லேரி வரையில், ஒன்றிய நிர்வாகம் சார்பில், தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படாததால், தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் தங்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.