வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
' நாம் ஒருவரின் தாகத்தை தீர்ப்பதை விட, வேறு என்ன நல்ல காரியம் செய்து விட முடியும். என்னால் இயன்றதை செய்து வருகிறேன்,' என, ஆட்டோ டிரைவர் முருகேசன் தெரிவித்தார்.
திருப்பூரில் காங்கயம் ரோடு, பொன்னம்மாள் லே-அவுட்டில் வசிப்பவர் முருகேசன். திருப்பூரில் ஆட்டோ ஓட்டி வரும் இவர், தன் ஆட்டோவில் பயணிப்போர் வசதிக்காக, ஆட்டோவில் குடிநீர் வசதி செய்துள்ளார். பிளாஸ்டிக் தண்ணீர் கேன் ஒன்றை ஆட்டோ உட்பகுதியில் கட்டி வைத்துள்ளார்.
முருகேசன் கூறுகையில்,' கடந்த வாரம் நெருப்பெரிச்சலுக்கு வாடகைக்கு சென்றிருந்தேன். அங்குள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் ரெய்டு நடந்ததால், கடைகள் அனைத்தும் நான்கு மணி நேரம் அடைக்கப்பட்டு விட்டது. குடிநீருக்கு வழியில்லாமல் பலர் சிரமப்பட்டதை உணர்ந்தேன். நானும் தண்ணீரின்றி தவிப்புக்கு உள்ளாகினேன்.
அப்போது, இனி ஆட்டோவில் வருவோர் வசதிக்கு குடிநீர் தருவதென முடிவு செய்து, ஆட்டோவில் கேன் வைத்து விட்டேன். 23 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன்; தினசரி, 800 ரூபாய் வருவாய் வருகிறது; நுாறு ரூபாய் தண்ணீர் கேன் வைக்க செலவு செய்கிறேன். நாம் ஒருவரின் தாகத்தை தீர்ப்பதை விட வேறு என்ன நல்ல காரியம் செய்து விட முடியும்; இயன்றதை செய்து வருகிறேன். நான் திருப்பூர் செய்தி மக்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவராக உள்ளேன்,' என்றார்.