பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்: அவதுாறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. கூர்மையான ஆயுதத்தால் ஏற்படுத்தும் காயத்தை விட, வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்பு தீவிரமானது என்பதை, அவர் உணர வேண்டும்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இதை எங்க ஊர்ல, 2,000 வருஷத்துக்கு முன்னாடியே வள்ளுவர், 'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு' என, எழுதிட்டு போயிட்டார்... திருக்குறளை கரைச்சு குடிச்சிருக்கிற சிதம்பரம் போன்றவங்க, ராகுலிடம் இதை எடுத்து சொல்லியிருந்தா, 'டவுட்'டே இல்லாம இப்படி ஒரு இக்கட்டுல அவர் சிக்கியிருக்க மாட்டார்!
இந்திய கம்யூ., - எம்.எல்.ஏ., மாரிமுத்து: சட்டசபையில் எங்கள் கட்சிக்கு எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைவு. எனவே, மாநிலம் முழுதும் உள்ள மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு, அதிக நேரம் வழங்க வேண்டும்.
டவுட் தனபாலு: மாநிலம் முழுதும் உள்ள மக்களின் கோரிக்கைகள் குறித்து, நீங்க பேசிட்டா மட்டும் எல்லாத்தையும் ஆளுங்கட்சி தீர்த்து வச்சிடுமா... 'தொகுதிக்கு புது திட்டங்களை கேட்காதீங்க'ன்னு, ஆளுங்கட்சியினருக்கே நிதியமைச்சர் தடா போடுறாரு... இதுல, நீங்க வேற குறுக்கே, மறுக்கே ஓடணுமான்னு, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: சென்னை போயஸ் கார்டன் பகுதியில், மறைந்த ஜெயலலிதாவின் வீடு உள்ளது. அதன் எதிரில் மூன்று மாடிகளுடன் கூடிய பெரிய வீட்டை, சசிகலா தரப்பினர் கட்டியுள்ளனர். விரைவில், போயஸ் கார்டன் வீட்டில்குடியேற திட்டமிட்டுள்ள சசிகலா, ஆதரவாளர்களை சந்தித்து பேச, அங்கு தனி கூட்ட அரங்கும் கட்டியுள்ளார்.
டவுட் தனபாலு: 'செஞ்சி கோட்டை ஏறியவன் எல்லாம் தேசிங்கு ராஜா இல்லை'ன்னு சொல்வாங்க... அந்த மாதிரி, போயஸ் கார்டன்ல, அதுவும், ஜெயலலிதா வீட்டுக்கு எதிர்ல குடிபோயிட்டா மட்டும், அவங்களை மாதிரி ஆகிடலாம்னு மனப்பால் குடிச்சா, அது இந்த ஜென்மத்துல மட்டுமில்ல, ஏழேழு ஜென்மத்துலயும் ஈடேறாது என்பதில், 'டவுட்'டே இல்லை!