மார்ச் 25, 1975-
திருச்சி மாவட்டம் முசிறிக்கு அருகேஉள்ள பொம்மலபாளையத்தில், சமஸ்கிருத பண்டிட் சங்கர சாஸ்திரி -- சீதாலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1899 ஏப்ரல், 9ல் பிறந்தவர் சுப்பிரமணிய அய்யர்.
சிறுவயதில், கிட்டப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு, நாராயணஸ்வாமி அய்யரிடம் பாட்டும், கரூர் சின்னஸ்வாமி அய்யரிடம் வயலின் இசையும் கற்றார். தன், 19வது வயதில், கச்சேரிகளில் பாடினார். 'நகுமாமு' என்ற தியாகராஜர் கீர்த்தனையை 'ஆபேரி' ராகத்தில் பாடி, தன் கச்சேரியை துவக்கிய இவர், நிரவல்களைப் பாடுவதில் வல்லவரானார்.
இவர் பாடிய இசைத்தட்டுகள் மிகவும் பிரபலம்அடைந்தன. மேடை கச்சேரிகளில் உச்சஸ்தாயியில், பாவத்துடன் பாடி பிரபலமடைந்தார். நிரவல்களைப் பாடுவதில் வல்லவரான இவர், அகில இந்திய வானொலியிலும் பாடினார்.
பின், இசை ஆசிரியராகி, 'முசிறி பாணி' சங்கீதத்தை, தன் சிஷ்யர்களால் பிரபலப்படுத்தினார். 'சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர்'உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1975ல் இதே நாளில், தன், 75வது வயதில் மறைந்தார். இவரின் நினைவாக மத்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. 'பத்மபூஷண்' விருது பெற்ற, இசை பேரறிஞரின் நினைவு தினம் இன்று!