புதுடில்லி : அவதுாறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து, லோக்சபா எம்.பி., பதவியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 52, தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், 2024 லோக்சபா தேர்தல் வரையில், அடுத்த 14 மாதங்களுக்கு அவர் எம்.பி.,யாக நீடிக்க முடியாது. அவரது சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்காக, கர்நாடகாவின் கோலாரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பிரசாரம் செய்தபோது, 'ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என முடிகிறது' என, பேசினார்.
வங்கி கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நிரவ் மோடி, ஐ.பி.எல்., எனப்படும், 'இந்தியன் ப்ரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியில் மோசடி செய்து வெளிநாடு தப்பிய தொழிலதிபர் லலித் மோடி ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும் ஒப்பிட்டு, அவர் இவ்வாறு பேசியதாக புகார் எழுந்தது.
இரண்டு ஆண்டுகள் சிறை
ராகுல் பேச்சை எதிர்த்து, குஜராத்தின் சூரத் மேற்கு சட்டசபை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வும், முன்னாள் குஜராத் அமைச்சருமான பர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதுாறு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று முன் தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எச்.எச்.வர்மா, இந்த வழக்கில் ராகுலை குற்றவாளி என அறிவித்தார். இந்த குற்றத்துக்காக, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பின், ராகுலுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, 30 நாட்களுக்கு இந்த தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவில் குறிப்பிட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., அந்தப் பதவியில் தொடரும் தகுதியை இழக்கின்றனர்.
போட்டியிட முடியாது
மேலும் தண்டனை முடிந்த பின், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தல்களில் அவர்கள் போட்டியிட முடியாது.
இந்நிலையில், ராகுலை தகுதி நீக்கம் செய்து, லோக்சபா செயலகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
அதன் விபரம்: சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி எம்.பி., ராகுல், 2023 மார்ச் 23 முதல் லோக்சபா உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுஉள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், எட்டாவது பிரிவின் கீழ் வரும் 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது. மேல்முறையீட்டில் ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால் மட்டுமே அவர் தேர்தலில் போட்டியிட முடியும்.
ராகுலின் தகுதி நீக்கத்துக்கு காங்., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: உண்மையை பேசியதற்காகவும், அரசியலமைப்புக்காகவும், மக்களின் உரிமைக்காகவும் போராடியதற்காக ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக பேசியதை போன்ற தோற்றத்தை உருவாக்க பா.ஜ., முயல்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் லலித் மோடி, நிரவ் மோடிக்கும் சம்பந்தமில்லை. ராகுல் உண்மையை பேசினார். அது பா.ஜ.,வினருக்கு பிடிக்கவில்லை. ராகுலை லோக்சபாவில் இருந்து வெளியேற்றிவிட்டால் பிரச்னை முடிந்துவிடும் என பா.ஜ., நினைக்கிறது. அது நடக்காது. அதானி விவகாரத்தில் பார்லி., கூட்டுக்குழு விசாரணை நடத்த கோரி தொடர்ந்து குரல் கொடுப்போம். ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து போராடுவோம். இதற்காக சிறை செல்லவும் காங்., தொண்டர்கள் தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
'இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாங்கள் தொடர்ந்து எதிர்கொள்வோம். எங்களை மிரட்டவோ அல்லது அமைதியாக்கவோ முடியாது' என, காங்., பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு கூடுதலாக சிறை தண்டனை பெற்றால், அவர்கள் வகித்து வரும் பதவியிலிருந்து உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2013, செப்., 28ல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8 (4)ல் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ., உடனடியாக பதவி இழக்காமல், அவர்கள் மேல்முறையீடு செய்ய மூன்று மாதங்கள் வரை அவகாசம் அளிக்க இந்த சட்ட திருத்தம் வழி செய்தது. இதை முட்டாள்தனமானது என விமர்சித்த ராகுல், அதன் நகலை செய்தியாளர்கள் முன்னிலையில் கிழித்தெறிந்தார். இந்த சம்பவம் நடந்து சரியாக 10 ஆண்டுகளில், அதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் ராகுல் தன் எம்.பி., பதவியை இழக்க நேர்ந்துள்ளது.
லோக்சபா உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் சட்ட அடிப்படை குறித்து காங்., தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து எம்.பி.,க்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்ற வாதத்தை முன்வைத்தனர். இதை பா.ஜ., - எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான மகேஷ் ஜெத்மலானி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ''ராகுல் சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சபாநாயகருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இன்றைய நிலவரப்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்,'' என தெரிவித்தார்.இதில் உள்ள சட்ட நடைமுறை குறித்து முன்னாள் காங்., தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியதாவது:ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது. தண்டனை ரத்து செய்யப்படவோ அல்லது தடை விதிக்கப்படவோ வேண்டும். அப்போது தான் அவர் எம்.பி.,யாக தொடர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.மேல் நீதிமன்றங்கள், ராகுலின் தண்டனையை ரத்து செய்யபவில்லை எனில், அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
புதுடில்லி ஐகோர்ட் உத்தரவு!புதுடில்லியை சேர்ந்த 9 வயது தலித் சிறுமி, 2021, ஆக., 1ல் சந்தேகத்துக்குரிய வகையில் இறந்தார். அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுமி மற்றும் அவரது பெற்றோர் புகைப்படத்தை, காங்., - எம்.பி., ராகுல் தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இது, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது என குற்றஞ்சாட்டி, ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரையும் விசாரித்த நிலையில், என்.சி.பி.சி.ஆர்., எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மோடி என்பது ஒரு நாடோடி பழங்குடியின சமூகத்தின் பெயர். இவர்கள், வட மாநிலங்களில் இருந்து 15 அல்லது 16 ம் நூற்றாண்டுகளில், நாடோடி இனமாக குஜராத் மாநிலத்துக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. இங்கு, நிலக்கடலை, எள் போன்றவற்றை அரைத்து எண்ணெயாக மாற்றும் தொழிலை செய்து வந்தவர்கள், பின் படிப்படியாக பிற தொழில்களிலும் ஈடுபட்டனர். எண்ணெய் உற்பத்தி செய்யும் சமூகமாக இருப்பதால், இவர்கள் அங்கு மோத் வானிக் அல்லது வாணிய சாதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வேறு மாநிலங்களிலும் மோடி என்ற குடும்பப்பெயர் கொண்டவர்களைக் காணலாம்.