மூணாறு:''நான் கொடுத்த ஆவணங்களை பரிசோதிக்காமல் எதிர்தரப்பு வாதத்தை மட்டும் ஏற்று கேரளா உயர்நீதிமன்றம் எம்.எல்.ஏ., வெற்றியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது,'' என, மார்க்சிஸ்ட் தேவிகுளம் தனி தொகுதி எம்.எல்.ஏ., ராஜா தெரிவித்தார்.
தேவிகுளம் தனி தொகுதியில் கிறிஸ்தவரான ராஜா போலி ஆவணங்கள் மூலம் ஆதிதிராவிடர் எனக்கூறி கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற குமார் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சோமராஜன், ராஜா வெற்றி பெற்றதை ரத்து செய்து மார்ச் 20ல் உத்தரவிட்டார்.
அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வசதியாக உத்தரவுக்கு பத்து நாட்கள் தடை விதித்தும் மார்ச் 21ல் மறு உத்தரவிட்டார்.
இந்த நீதிமன்றம் உத்தரவு தொடர்பாக எம்.எல்.ஏ., ராஜா கூறியதாவது: நீதிமன்றம் உத்தரவை மதிக்கிறேன். அதே நேரம் எதிர் தரப்பின் வாதத்தை மட்டும் ஏற்று, என் கருத்தை முழுமையாக கேட்காமலும், நான் அளித்த 16 ஆவணங்களை பரிசோதிக்காமலும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக 1950க்கு பிறகு பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு அங்கு வழங்கப்பட்ட சலுகைகள் கேரளாவில் வழங்க தகுதி இல்லை என கூறப்பட்டுள்ளது.
என் தந்தையின் தாயார் 1949ல் குண்டளை எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்தார் என்பதற்கு டாடா கம்பெனியிடம் ஆவணங்கள் உள்ளன. என் வெற்றியை மட்டும் ரத்து செய்த நீதிமன்றம் ஜாதி சான்றிதழ் உள்பட ஆவணங்களை ரத்து செய்யவில்லை. உத்தரவை எதிர்த்து ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளேன். அதில் நிச்சயம் நீதி கிடைக்கும், என்றார்.