வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''ஆரம்பத்துல இருந்த வேகமும், விறுவிறுப்பும் குறைஞ்சிடுச்சுங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அந்தோணிசாமி.
''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
![]()
|
''ஈரோடு மாவட்ட எஸ்.பி.,யா, ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி வந்தவர் சசி மோகன்... வந்ததுமே, லாட்டரி, சட்டவிரோத மது விற்பனை, சூதாட்டம், ரவுடியிசம், 'குட்கா' விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்தாருங்க...
''இந்தப் பொருட்கள் விற்பனையை தடுக்காத போலீசார் மேலயும் நடவடிக்கை எடுப்பேன்னு, கறார் காட்டினாரு... ஆனா, இப்ப நிலைமை தலைகீழா மாறிடுச்சுங்க...
''எஸ்.பி., எதை எல்லாம் அடக்கி, ஒடுக்கி வச்சிருந்தாரோ, அதெல்லாம் இப்ப தங்கு தடையில்லாம நடக்குதுங்க... எஸ்.பி.,யின் வேகத்துக்கு அணை போட்டது யாருன்னு தெரியலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பறக்கும் படையில இருந்து, பறந்து பறந்து வசூல் பண்ணுதாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்கள்ல இருக்கிற, 'டாஸ்மாக்' கடைகளை கண்காணிக்கும் பறக்கும் படைக்கு, சமீபத்துல புதுசா ஒரு அதிகாரியை நியமிச்சாவ வே... மண்டல அலுவலகத்துல இருந்து வர்ற பட்டியல் அடிப்படையில, இவர் தினமும் நான்கு கடைகள்ல ஆய்வு நடத்தணும்...
''அங்க சரக்கு இருப்பு, விற்பனை எல்லாத்தையும் சோதனை பண்ணி, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தரணும்... ஆனா, புதுசா வந்த அதிகாரி, நாலு கடைகளோட மேலும் சில கடைகளுக்கும் ஆய்வுக்கு போயிடுதாரு வே...
''அங்கன ஏதாவது குத்தம் குறை கண்டுபிடிச்சு, மேலிடத்துல, 'போட்டு குடுக்காம' இருக்க, 10 ஆயிரம் ரூபாயை கறந்துடுதாரு... இதனால, கடை ஊழியர்கள் எல்லாம் நொந்து போயிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''நேத்து, சிவகுமார் நடிச்ச, கந்தன் கருணை படம் பார்த்தேன்... அருமையா இருந்தது...'' என்றபடியே வந்த குப்பண்ணா, ''போன ஆட்சியில பழிவாங்கப்பட்ட அதிகாரியை, இந்த ஆட்சியிலும் ஓரம்கட்டறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார்.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கோவையைச் சேர்ந்த அந்த அதிகாரி, சென்னையில நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துல உயர்ந்த பொறுப்புல இருக்கார்... அ.தி.மு.க., ஆட்சியில, பல ஆயிரம் கோடி ரூபாய் பணிகளுக்கு கையெழுத்திடச் சொல்லி நெருக்கடி குடுத்திருக்கா ஓய்...
''அவர் மறுத்துட்டதால, பதவியில இருந்து துாக்கி, காத்திருப்போர் பட்டியல்ல போட்டு வச்சிருந்தா... இதுக்கு, அப்ப எதிர்க்கட்சி தலைவரா இருந்த ஸ்டாலின் கூட கண்டனம் தெரிவிச்சிருந்தார் ஓய்...
![]()
|
''ஆட்சி மாறியதும், போராடி முக்கிய பதவிக்கு வந்தார்... ஆனா, அ.தி.மு.க.,வினருக்கு இவாளும்சளைச்சவா இல்லையே...
''அதிகாரி கையெழுத்துக்கு பிறகு போட வேண்டிய உயர் அதிகாரிகள் கையெழுத்தை முதல்ல போட்டுண்டு, கடைசியா அதிகாரி கையெழுத்தை போடுங்கோன்னு நெருக்கடி தராளாம்... இவர் மறுக்கறதால, 'டம்மி'யாக்கி, கோவைக்கே அதிகாரியை, 'பேக்' பண்ணிடலாம்னு பிளான் பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''நடராஜனா... சொல்லுடே, ஊர்ல எல்லாரும் நல்லாயிருக்காவளா...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் எழுந்தனர்.