வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றிய, அம்மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் பதவியிறக்கம் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
![]()
|
சென்னையை தவிர்த்து மற்ற, 20 மாநகராட்சிகளில், மக்கள் தொகை அடிப்படையில், புதிய பணியிடங்கள் தோற்றுவித்து, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சமீபத்தில் அரசாணை (எண்: 152) வெளியிட்டது. அந்த அரசாணையை அமல்படுத்தக்கூடாது; ரத்து செய்ய வேண்டுமென, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இச்சூழலில், அரசாணையை அமல்படுத்தும் பணிகள் படிப்படியாக துவக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, நிர்வாக பொறியாளர்களுக்கு கண்காணிப்பு பொறியாளர் அந்தஸ்து வழங்கி, நகர பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது, மாநகராட்சியில் புதிதாக தோற்றுவித்த துணை கமிஷனர்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றிய, அம்மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், பதவியிறக்கம் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சியில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட துணை கமிஷனர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
இதேபோல், கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலக முன்னாள் இணை இயக்குனர் (தேர்தல்) பூங்கொடி, கோவையில் உள்ள தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
![]()
|
தாம்பரம் மாநகராட்சி முன்னாள் கமிஷனர் இளங்கோவன், திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதுநாள் வரை கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தவர். சேலம் மண்டல நகராட்சிகளின் இயக்குனராக பணிபுரியும் சுல்தானா, திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக தோற்றுவித்துள்ள துணை கமிஷனர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். சுல்தானா பணியாற்றிய இடத்துக்கு திருப்பூரில் பணிபுரிந்த ராஜன் மாற்றப்பட்டிருக்கிறார். ஒசூர் மாநகராட்சி முன்னாள் கமிஷனர் பாலசுப்ரமணியன், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மற்றொரு துணை கமிஷனர் பணியிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷிவ்தாஸ் மீனா பிறப்பித்திருக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement